அதிமுக சட்ட விதிகளில் அதிரடியாக பல திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ள நிலையில், இன்று கூடிய அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“அதிமுக பொதுக் குழு கூட்டத்தை நடத்தலாம்” என்று, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, சென்னை வானகரத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது.

இந்த கூட்டத்தில், அதிமுக சட்ட விதிகளில் அதிரடியாக பல திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன், அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் யாவும் பொதுக் குழுவிலும் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி,

- அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன.

- அதிமுகவில் முதன் முறையாக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு உள்ளது.

- அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- அதிமுக பொருளாளருக்கான அதிகாரரங்கள் அனைத்தையும் பொதுச் செயலாளருக்கு வழங்கி, இன்றைய தினம் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

- ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன், அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

- அதிமுகவில் இதுவரை இல்லாத அளவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வீதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

- அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

- இனி வரும் அடுத்த 4 மாதங்களுக்குள் அதிமுகவின் நிரந்திர பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானம் நிறைவேற்றம்.

- அதிமுகவின் நிரந்திர பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும், தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றம். இப்படியாக, மொத்தமாக இந்த கூட்டத்தில் அதிமுக சட்ட விதிகளில் அதிரடியாக பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதனையடுத்து, இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி உதயகுமார், “அதிமுகவில் தொண்டர்கள் புரட்சி நடைபெற்று உள்ளது என்றும், தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் உழைப்பால் தொண்டர்களின் மனங்களை வென்றவர் இபிஎஸ்” என்றும், சூளுரைத்தார். 

“ராமனுக்கு மகுடம் சூட்டுகிறபோது லட்சுமணன் தியாகத்தினால் வரலாற்றில் இடம் பெற்றார் என்றும், ஒன்றரை கோடி தொண்டர்கள் லட்சுமணன் போல இபிஎஸ் உடன் நிற்கிறோம்” என்றும், ஆர்.பி உதயகுமார் புகழாராம் சூட்டினார்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி - ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, அந்த பகுதியே போர்களம் போல் காட்சி அளித்தது. இந்த மோதல் காரணமாக, இரு தரப்பிலிருந்தும் 15 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.