அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஏட்டிக்கு போட்டியாக, “எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுக வில் இருந்து நீக்குகிறேன்” ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார்.

அதிமுக சட்ட விதிகளில் அதிரடியாக பல திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ள நிலையில், இன்று கூடிய அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ள நிலையில், “அக்கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் தேர்தல் அடுத்த 4 மாதத்தில் நடைபெறும்” என்றும், முன்னதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக பொதுக் குழு மேடையில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி “1.50 கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறீர்கள் என்றும், உங்களுடைய உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்றும், நாசுக்காக பேசிய அவர், “ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக் குழு உறுப்பினர்கள்தான் கூறுகின்றனர்” என்றும், தெளிவுப்படுத்தினார்.

மேலும், “உங்களுடைய உணர்வுகளை தீர்மானமாக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார் என்றும், அதுவரை அமைதி காக்கவும்” என்றும், அவர் பேசினார். 

அதன் தொடர்ச்சியாகவே, அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும்” என்ற தீர்மானத்தை, முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். 

அப்போது, இந்த தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்தார். 

அதன் தொடர்ச்சியாகவே, “ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜெ.சி.டி பிராபகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் நீக்கக் கோரி தீர்மானம்” அங்கு கொண்டு வரப்பட்டது. 

இதனையடுத்தே, அனைத்து பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, ஏட்டிக்கு போட்டியாக, “எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுக வில் இருந்து நீக்குகிறேன்” என்று, ஓ.பன்னீர் செல்வம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அறிவித்தார்.

இது குறித்த அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக சட்ட விதிகளின் படி தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்தனர் என்றும், என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கும், கே.பி.முனுசாமிக்கும் அதிகாரம் இல்லை” என்றும், விளக்கம் அளித்தார்.

“அதிமுக விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமிக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், அவர்கள் இருவரையும் அதிமுகவின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவிக்கிறேன்” என்றும், அதிரடியாக அறிவித்தார்.

குறிப்பாக, “அதிமுக விதிகளின் படி தொண்டர்களுடன் இணைந்து, நீதிமன்றத்திற்கு சென்று நீதியை பெறுவோம்” என்றும், ஓ.பன்னீர்செல்வம் சூளுரைத்தார்.

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் கல்வீச்சு மோதல் சம்பவம் தொடர்பாக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்தில் ஈபிஎஸ் தரப்பு புகார் அளித்துள்ள நிலையில், அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, சற்று முன்னதாக அதிமுக தலைமை கழக அலுவலகம் அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.