ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

hijab row

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.  இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். 

இந்நிலையில், ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது. இது குறித்து கர்நாடக உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா கூறும்போது, "மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவது வழிபாடு நடத்த அல்ல. மத அடையாளங்களை வழிபாட்டு தலங்களுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஹிஜாப், காவித் துண்டு ஆகியவற்றை கல்லூரிக்குள் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒன்றுபட்ட மனோநிலைக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் பாரத மாதாவின் பிள்ளைகள் என்பதை உணர வேண்டும்" என்றார். மேலும் மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்ற கர்நாடக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு கர்நாடக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. "நான் சட்டபேரவைக்கே ஹிஜாப் அணிந்து செல்கிறேன்; என்னை தடுக்க அவர்களுக்கு துணிச்சல் உள்ளதா?" என கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் ஃபாத்திமா சவால் விடுத்தார். முன்னாள் முதல்வர் குமாரசாமி, "ஹிஜாப் தடையால் பெண் கல்வி பாதிக்கும்" என்று கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்திய எல்லையை தாண்டி பிற நாடுகளிலும் இதுகுறித்து பேசப்படுகிறது. இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள் 6 பேர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, தங்களை ஹிஜாப் அணிந்து அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளனர். இந்த மனு மீது நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. முதல் நாளில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் தேவதத் காமத் ஆஜராகி வாதிட்டார்.

இந்த நிலையில், மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்லெறி சம்பவங்கள் நடைபெறுகின்றன. கர்நாடக மாநில சுப்ரீம் கோர்ட்டில்  உள்ள ஹிஜாப் தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக மாநில சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடுவது முறையல்ல என்றும் ஏன் தலையிட வேண்டும் என கூறி எந்தவொரு குறிப்பிட்ட தேதியும் ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது.