“மனைவியின் தலையை வெட்டிய” கணவன், கையில் வைத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் நாட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஈரான் நாட்டில் உள்ள அஹ்வாஸில் மோனா ஹெய்டாரி என்ற 17 வயது இளம் பெண், அங்குள்ள குவாலிஸ் என்னும் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தவர்.

அதாவது, அந்நாட்டில் பெண்களின் திருமண வயது 12 ஆக இருக்கிறது. இதனால், மோனா ஹெய்டாரி என்ற இந்த பெண்ணிற்கு 12 வயதிலேயே திருமணம் நடந்து உள்ளது. தற்போது, இந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளார்.

இந்த சூழலில் தான், மனைவி மோனா ஹெய்டாரி மீது சந்தேகப்பட்ட அவரது கணவன், அவரது தலையை வெட்டி, அவரை கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார்.

இதனையடுத்து, ஒரு கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடனும், மறு கையில் கொலை செய்த மனைவியின் தலையுடன் அந்த பகுதியின் தெரு எங்கும் சுற்றி வந்திருக்கிறார் அந்த வெறிப்பிடித்த கணவன்.

இதனைப் பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதனை வீடியோவாக எடுத்து, பலரும் இணையத்தில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “எனது மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டதால், அவரை கொன்றேன்” என்று, அவரது கணவன் குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த வீடியோவைப் பார்த்த அந்நாட்டின் பெண்கள் அமைப்பு, கடுமையாக கொந்தளித்து எழுந்த நிலையில், மனைவியை கொலை செய்த அந்த கணவனையும், அந்த கணவனின் சகோதரையும் அந்நாட்டு போலீசார், அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், “பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை செயல்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால், இது போன்ற சம்பவங்களை இங்கு நடக்கிறது” என்றும், பெண்கள் பலரும் குற்றம்சாட்டி உள்ளனர்.

அத்துடன், “அந்த நபர் ஒரு பெண்ணின் தலை துண்டித்து அதை தெருக்களில் காட்டி பெருமிதம் கொண்டார் என்றும், இப்படிப்பட்ட சோகத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்றும், மீண்டும் பெண் கொலைகள் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்க வேண்டும்” என்றும், அந்நாட்டின் ஊடகங்கள் வலியுறுத்தி உள்ளன.

குறிப்பாக, இது தொடர்பாக பேசிய அந்நாட்டு வழக்கறிஞர் அலி மொஜ்தா ஹெட்சாதே, அந்நாட்டின் சீர்திருத்தவாத பத்திரிகையான ஷார்க்கில், “சட்டத்தில் உள்ள ஓட்டைகளே கௌரவக் கொலைகளுக்கு வழி வகுப்பதாக” பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

முக்கியமாக, இந்த கொலையின் மூலமாக, அந்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் “பெண்களின் திருமண வயதை சட்டபூர்வமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்” என்கிற கோரிக்கை குரல்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த கொலை சம்பவங்கள், உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.