இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையில் அத்தியாவசிய பொருளின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தற்போது  இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.
 
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கியாஸ் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இலங்கையின் மிகப்பெரிய கியாஸ் நிறுவனங்களான லிட்ரோ கியாஸ் மற்றும் லாக்ஸ் கியாஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

மேலும் இதற்கிடையே இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே டெல்லி வந்தார். அவர் நாடாளுமன்ற வளாகத்தில்  பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள நிதியுதவிக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த பசில் ராஜபக்சே, வரும் 30-ம் தேதி இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து வெளியுறவு செயலாளர் ஹர்சவர்தன் ஷிரிங்லா மற்றும் பல்வேறு அதிகாரிகளையும் பசில் ராஜபக்சே சந்தித்து பேசினார். இந்த வருடத்தில் இதுவரை இந்தியா 1.40 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது.

இலங்கையில் எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.நிதி நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் இலங்கை ரூபாவின் பெறுமதியை 36 வீதத்தால் குறைத்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. போர் காலத்தில் கூட காணப்படாத  நிலை அங்கு உள்ளது. அரிசியின் விலை  கிலோ ஒன்றுக்கு 448 இலங்கை ரூபாயாக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.128 ஆகும். ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263 (ரூ. 75 இந்திய ரூபாய்) உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது.

அந்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.280-க்கும், டீசல் லிட்டர் ரூ.170-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. சமையல் எரிவாயு விலையும் பெருமளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் மூன்று வேலை உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கடும் தடுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களில் மக்கள் நீண்ட வரிசையில் மக்கள் காத்துகிடக்கின்றனர்.

இந்நிலையில், எரிபொருள் வாங்க வரிசையில் காத்து நின்றுகொண்டிருந்த 2 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்புவிற்கு வெளிப்புற நகரில் நேற்று பெட்ரோல் வாங்குவதற்காக பெட்ரோல் நிலையம் முன் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் திடீரென அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

அதேபோல், கண்டி நகரில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணை வாங்குவதற்காக வெயிலில் காத்திருந்த முதியவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். எரிபொருள் வாங்க வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள் பலரும் மயங்கி விழுந்த சம்பங்களும் அரங்கேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.