ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

hijab row

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர் இதனால் வன்முறை ஏற்பட்டது.

இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் அப்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படி தெரிவித்தனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். 

கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.  இதை தொடர்ந்து ஐகோர்ட்டு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாதகிரியில் முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர்.

உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கலில் முஸ்லிம் அமைப்பினர் கடை அடைப்பு நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, “ஹிஜாப் அத்தியாவசியமான நடைமுறை அல்ல என கர்நாடக ஐகோர்ட்டு  தீர்ப்பு அளித்ததை ஏற்க முடியாது. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க கோரியும், தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்தப்படும் என அறிவித்தது.

பெங்களூரில் மார்ச் 21 வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு ஊர்வலம், போராட்டம் நடத்த அனுமதியில்லை. இதனால் மாநிலத்தின் பிற இடங்களில் மக்கள் ஒன்றாக கூடி ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பந்த் காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக ரிசர்வ் படை போலீசார், மாவட்ட ஆயுத படை போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கிடையே ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு ஹோலி விடுமுறைக்கு பிறகு விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே, மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி இது தொடர்பாக அரசாணையையும் அம்மாநில பாஜக அரசு பிறப்பிதத்து.

இதனிடையே, ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாபுக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து 6 மாணவிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

மேலும் அதேசமயம், ஹிஜாப் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மதுரையில் நடந்த ஒரு கண்டனக் கூட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தணிக்கைக் குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லாஹ் ஜார்கண்டில் காலை நடைபயிற்சியின் போது தவறான தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொல்லப்பட்டதாக உள்ளது. மேலும், “எங்கள் சமூகத்தில் உணர்ச்சிவசப்பட்ட சிலர் இருக்கிறார்கள். நீதிபதிகளுக்கு ஏதாவது நேர்ந்தால், எங்களை குற்றம் சாட்டுவதற்கான சந்தர்ப்பத்திற்காக பாஜக காத்திருக்கிறது” என்றும் அவர் பேசியுள்ளது போன்று அந்த வீடியோவில் உள்ளது.

அதேபோல், தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையக பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததாகவுகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக, கோவை ரஹ்மத்துல்லா என்பவர் திருநெல்வேலியிலும், ஜமால் முகமது உஸ்மானி தஞ்சாவூரிலும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தந்த புகாரை முழுமையாக விசாரிக்கவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.