சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் ஒருவர், அந்த சிறுமியை அங்குள்ள பூங்காவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தான் இப்படி ஒரு குற்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். தற்போது கொரோனா விடுமுறை காலம் என்பதால், அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து வந்தார்.

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த 16 வயது சிறுமியை பின்தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்து உள்ளார். தன்னுடைய அசத்தலான பேச்சாலும், ஆசை ஆசையான வார்த்தைகளாலும் ஒரு வழியாக அந்த சிறுமியை தனது காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார் அந்த இளைஞர். ஒரு கட்டத்தில், அந்த சிறுமியும் அந்த இளைஞரை நம்பி காதலித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, காதலர்களாக மாறிய அந்த இளைஞனும், அந்த சிறுமியும், ஜோடியாக அந்த பகுதியில் உள்ள திரையரங்கங்களுக்கு சினிமாவிற்கு சென்று வந்துள்ளதாகவும் தெரிகிறது. இப்படியாக, அவர்கள் இருவரும் காதல் ஜோடியாக அந்த பகுதியில் ஊர் சுற்றி தங்களது காதலை மேலும் வளர்த்து வந்துள்ளனர்.

அத்துடன், ஐதராபாத்தின் யூசுப்குடா பூங்காவிற்கு அவர்கள் இருவரும் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்கள்.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி காதல் ஜோடிகளான அவர்கள் இருவரும் எப்போதும் போல அந்த பூங்காவிற்கு வந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருந்து உள்ளனர்.

அப்போது, சிறுமி எதிர்பாராத நேரத்தில், அந்த இளைஞன், தனது பையில் வைத்திருந்த தாலியை எடுத்து சிறுமியின் கழுத்தில் திடீரென்று கட்டி உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, சிறிது நேரத்தில் இதனை துளியும் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. ஆனால், அந்த இளைஞனோ, “நம் இருவருக்கும் திருமணம் நடைபெற்று விட்டது” என்று, அந்த சிறுமியிடம் கூறிவிட்டு, அந்த சிறுமியை அந்த பூங்காவில் வைத்தே, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். 

இதனால் இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார். அப்போது, “நமக்கு திருமணம் ஆகிவிட்டதால், இதில் தவறு ஒன்றும் இல்லை” என்று கூறி, அந்த சிறுமியை அந்த இளைஞன் சமாதானம் செய்ய முயன்று உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த இளைஞன், உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று, “எங்களுக்குத் திருமணம் நடைபெற்று விட்டதாகக் கூறி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதனால், அந்த உறவினர் அந்த இளைஞரின் தாயை தொடர்பு கொண்டு விசயத்தைக் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞரின் தாயார், அங்கு வந்து இருவரையும் கடுமையாகக் கண்டித்துவிட்டு “இனிமேல் என் மகனுடன் நீ பேசுவதைப் பார்த்தால் அவ்வளவு தான்” என்று கூறி, அந்த சிறுமியை அங்கிருந்து அனுப்பி உள்ளார். 

இதனால், அழுது கொண்டே வீடு திரும்பிய சிறுமி, தனது கழுத்தில் இருந்த தாலியை மறைத்து விட்டு வீட்டில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து வந்திருக்கிறார்.

இப்படியாக நாட்கள் சென்ற நிலையில், கடந்த மே 17 ஆம் தேதி, அந்த சிறுமி தனியாக அழுதுகொண்டு இருந்துள்ளார். இதனை கண்ட சிறுமியின் தாயார், “என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்? என்று, விசாரித்த உள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்த திடீர் திருமணத்தைப் பற்றி சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாயார், சம்மந்தப்பட்ட இளைஞர் மீது, பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனையடுத்து, அந்த இளைஞர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், இந்த இளைஞனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.