திருமணம் செய்து வைக்க வந்த புரோகிதர் ஒருவர், மணப்பெண்ணின் தாலி தங்கத்தைத் திருடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் தான், புரோகிதர் ஒருவர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்கக்கூடிய சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள தங்கமணி குண்டுகளைத் திருடிச் சென்றிருக்கிறார்.

தெலுங்கானா மாநிலம் துப்ரான் பகுதியைச் சேர்ந்த ஞானசந்தர் தாஸ் - வசந்தா ஆகியோருக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதன் படி, கடந்த 16 ஆம் தேதி திருமண முகூர்த்த தேதி குறிக்கப்பட்டு, திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் இருவீட்டாரும் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த திருமணத்திற்கு, வேத மந்திரங்கள் கூற அந்த பகுதியைச் சேர்ந்த புரோகிதர் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படியே, கடந்த 16 ஆம் தேதி திருமண மணமக்கள் ஞானசந்தர் தாஸ் - வசந்தா ஆகியோர் மணமேடையில் வந்து அமர்ந்தனர். அவர்களுக்குக் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் தாலி கட்ட வேண்டும் என்று, வீட்டுப் பெரியவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

அப்போது, அந்த திருமணத்திற்கு வந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த புரோகிதர், வேத மந்திரங்கள் முழங்க மணமக்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தார். ஆனால், மணப்பெண்ணின் தாலி மற்றும் தாலி செயினில் கோர்க்கக் கூடிய தங்கமணி குண்டுகள் என அனைத்தையும் மண மேடையில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. 

அப்போது, இந்த தங்க மணி குண்டுகளை அந்த புரோகிதர், யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக அவற்றை எடுத்து, தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

மாப்பிள்ளை, மணப்பெண்ணிற்குத் தாலி கட்டிய சிறிது நேரத்தில், மணமகளின் தாலியில் தங்கமணிக் குண்டுகள் இல்லாததைக் கண்டு பெண் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் விசாரித்து உள்ளனர். பதிலுக்கு, அவர்களும் ஒன்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதனால், இரு வீட்டார் மத்தியலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த திருமணத்திற்கு வாழ்த்த வந்திருந்த அனைவருக்கும், இது கடும் அதிர்ச்சியாக இருந்தது.

இதனையடுத்து, அந்த திருமணத்தை வீடியோ எடுத்தவரிடம், தாலி கட்டும் முன்பாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைக் காட்டும் படி கேட்டுக்கொண்டனர். அவரும், அந்த வீடியோ காட்சிகளைக் காட்டியிருக்கிறார். அப்போது, அந்த திருமண வீடியோவில் திருமணத்தை நடத்தி வைத்த அந்த புரோகிதர், தங்கமணி குண்டுகளைத் தனது பாக்கெட்டில் போடுவது தெளிவாக அதில் பதிவாகி இருந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும் உடனடியாக இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அதற்குள் சம்மந்தப்பட்ட அந்த புரோகிதர் தலைமறைவாகிவிட்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வீடியோவை ஆதாரமாக வைத்து போலீசார் திருமண மண்டபத்தில் கைவரிசை காட்டிய புரோகிதரை மிக தீவிரமாகத் தேடி வருகின்றனர்.