ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா பெண் நோயாளியை, மருத்துவமனையைச் சேர்ந்த 3 ஊழியர்கள் பலவந்தமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததால், அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்தியாவில், கடந்த ஆண்டு கொரோனா பெருந்தோற்று பரவி தொடங்கியதும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, தொடக்கத்தில் வழக்கமாக நடைபெறும் குற்றங்கள் எல்லாம் சற்று குறைந்து காணப்பட்டன. ஆனால், நாட்கள் செல்ல செல்ல, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமை குற்றங்கள் வழக்கத்தை விட அதிக அளவில் அதிகரித்து காணப்பட்டன. இது தொடர்பாக மத்திய அரசு சில புள்ளி விபரங்களையும் அப்போது வெளியிட்டது. 

அதே நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்கள் அவ்வப்போது அதே மருத்துவமனை ஊழியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும், இதில் சிலர் உயிரிழந்துவிடும் பரிதாபம் நிகழ்வாதாக, தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், தற்போது இப்படியான ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறி மீண்டும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அத்துடன், அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்ததால், அந்த பெண் அந்த மருத்துவமனையின் ஐசியு வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அப்போது, அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 3 பேர் சேர்ந்து ஐசியு வார்டில் வைத்தே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை வெறித்தீர மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

இதையடுத்து, அந்த பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அதன் தொடர்ச்சியாக, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகள், மருத்துவமனை நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், எந்த பலனும் இல்லை. இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் வழக்குப் பதிவு செய்து உள்ளார். 

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்த மருத்துவமனை நிர்வாகம், “கொரோனா காரணமாகவே அந்த பெண் உயிரிழந்ததாகக் கூறி, அந்த இளம் பெண்ணின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்து” உள்ளது.
 
இந்த குற்றச்சாட்டுக் காரணமாக, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக “தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்” என்று, மாநில நிர்வாகத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.