கேரளாவில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகையானது, தமிழர்களின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டு வந்தாலும், பக்கத்து மாநிலமான கேரளாவில் கிட்டதட்ட 6 மாவட்டங்களில் தமிழ் மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதியான நாளைய தினம் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு சற்று முன்பு கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்” என்று, குறிப்பிட்டு, அந்த கடிதத்தை தொடங்கி இருந்தார். 

அதன்படி, “கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளான பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகிறது என்று அறிகிறேன்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “ஜனவரி 14 ஆம் தேதி தை தமிழ் மாதத்தின் முதல் நாள் என்றும், ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும், ஆகவே தமிழ் சமூகங்களுக்கிடையே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்த கடித்ததை பரிசீலனை செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, கேரளாவில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை விடுப்படுவதாக” கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தற்போது அறிவித்து உள்ளார்.

இதனால், கேரளாவில் வாழும் 6 மாவட்ட தமிழ் மக்களும் உற்சாகமடைந்து உள்ளனர். 

அத்துடன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த செயல், தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.