மலையாளத் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் துல்கர் சல்மான் தற்போது இந்தியத் திரையுலகில் மிகவும் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். முன்னதாக துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குரூப் திரைப்படம் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தொடர்ந்து மலையாளத்தில் காவல்துறை அதிகாரியாக துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் திரைப்படம் இந்த பொங்கலில் ரிலீசாக இருந்தது. ஆனால் ஊரடங்கு மற்றும் அதிகப்படியான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பாலிவுட்டில் இயக்குனர் பால்கி இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள CHUP - THE REVENGE OF ARTIST படத்திலும் துல்கர் நடித்துள்ளார்.

அடுத்ததாக தெலுங்கில் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் யுத்தம் தோ ராசினா பிரேம கதா திரைப்படத்தில் துல்கர் ராணுவ வீரராக நடித்து வருகிறார். இதனிடையே துல்கர் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் ஹே சினாமிகா. இந்திய திரை உலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டர் ஹே சினாமிகா படத்தின் மூலம் முதல்முறை இயக்குநராக களம் இறங்கியுள்ளார். 

ஹே சினாமிகா திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நக்ஷ்த்ரா நாகேஷ் மற்றும் RJ விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் கிலோபல் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ஹே சினாமிகா படத்திற்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ஹே சினாமிகா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், ஹே சினாமிகா திரைப்படத்தின் முதல் பாடலான அச்சமில்லை பாடல் நாளை(ஜனவரி 14) ரிலீசாக உள்ளது. இந்தப் பாடலை நடிகர் துல்கர் சல்மான் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலின் முன்னோட்டமாக தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.