“அடுத்த “ 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டில் நாம் இருந்தாலும், நமது இலக்கு இந்தியா 100 என்பது தான்” என்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூளுரைத்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 10 வது மத்திய பட்ஜெட் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 2 வது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்த, நாடாளுமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு தொடர்ந்து பேசி வருகிறார்.

அதன் படி பேசத் தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக” பெருமிதத்தோடு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய சவாலை சந்தித்து வருகிறது என்றும், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருக்கும்” என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார். 

“ உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிகைத் தெரிவித்தார். 

“ஆத்ம நிபார் பாரத் திட்டத்திற்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும், கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரி செய்து வருகிறோம்” என்று தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், “சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டில் நாம் இருந்தாலும், நமது இலக்கு இந்தியா 100 என்பது தான்” என்றும், நிர்மலா சீதாராமன் சூளுரைத்தார்.

மேலும், “அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றும், பொருளாதார முதலீடு உள்ளிட்ட அரசின் 4 முக்கியமான அம்சங்களை குறித்தும்” நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார்.

அத்துடன், “ஏர் இந்தியாவை விற்கும் நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்து விட்டது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

முக்கியமாக, “400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்” என்று, அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்பாடு செய்யப்படும்” என்றும், அறிவித்தார்.