இளம் பெண் ஒருவர், ஒரு குடும்பத்தினரால் கடத்தப்பட்டு பல பெண்கள் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் சொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதுவும், டெல்லியில் 73 வது குடியரசு தினம் கொண்டாப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தான், இப்படியான ஒரு சம்பவமும் அங்கு நடந்து உள்ளது.

டெல்லி கஸ்துரிபா நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவருக்கு திருமணமான நிலையில், அவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார்.

அப்போது, இந்த இளம் பெண்ணின் பின்னால், பக்கத்து ஏரியாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் கடந்த சில நாட்களாக பின் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் தான், அந்த இளைஞர் திடீரென உயிரிழந்து உள்ளார். இதனால், அந்த இளைஞரது உயிரிழப்பிற்கும் இந்த இளம் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய அந்த இளைஞரின் குடும்பத்தினர், ஆண் - பெண் என மொத்தம் 11 பேர் சேர்ந்து, இந்த திருமணம் ஆன இளம் பெண்ணை கடத்திச் சென்று, தங்கள் வீட்டு குடும்ப பெண்கள் முன்னிலையிலேயே அந்த இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இந்த கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு அந்த வீட்டு பெண்கள் பலரும் உடந்தையாக இருந்ததுடன், அவர்கள் கண் முன்னாலேயே இந்த கொடூரம் அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு பிறகு, அந்த இளம் பெண்ணின் தலை முடியை வெட்டி, கருப்பு சாயத்தை தலையில் ஊற்றி, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து, பொது வெளியில் அதுவும் பட்ட பகலில் ஊர்வலமாக அந்த பெண்ணை அந்த குடும்பத்தினர் அழைத்து சென்று உள்ளனர். 

அப்போது, அங்கு கூடிய கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணை தலையில் தாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபர்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

அத்துடன், இந்த கொடூர சம்பவங்கள் அனைத்தையும் அங்கு கூடி நின்றவர்கள் வேடிக்கைப் பார்த்த நிலையில், தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை போலீசாருக்கும் அனுப்பி வைத்தனர். இதனைப் பார்த்து பதறிப்போன போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

ஆனாலும், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, டெல்லியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால், “உச்சக்கட்ட இந்த கொடூர செயலை செய்த அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றும், பலரும் இணையத்தில் வலியுறுத்தி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, இந்த பிரச்சனையை கையில் எடுத்து உள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், “இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி உள்ளதாகவும்” தெரிவித்து உள்ளார். 

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் பெண்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர். தற்போது, கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம், டெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.