கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பொது மக்களுக்கு சில காட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய வைரசானது, முதல் அலையை கடந்து 2 வது அலையும் வந்து, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் 3 வது அலையும் கடந்திருக்கிறது.  

இந்தியாவைப் பொறுத்தவரையில், தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ், மெல்ல இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல மீண்டும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்திருக்கிறது.

அந்த வகையில், தமிழகத்தில் நாளோன்றுக்கு சுமார் 25 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் இந்த தொற்று எண்ணிக்கையானது சுமார் 100 ஆக அதிகரித்து, தற்போது அதன் எண்ணிக்கை தற்போது சற்று இன்னும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்று நாடு முழுவதும் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலர் கடந்த வாரம் கடிதம் எழுதி எச்சரிக்கை செய்திருந்தார். 

அந்த கடிதத்தில், “கொரோனா தொற்று குவியல்கள் corona cluster எண்ணிக்கையானது, தற்போது சற்று அதிகரித்து இருக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி, “பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள” அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை உறுமாறிய கொரோனா தொற்று பதிவாக தொடங்கி உள்ளதாக” குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தான், தமிழகத்த்தில் நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 200 தாண்டி பதிவாகி உள்ளது. 

இதனால், “தமிழகத்தில் மீண்டும் கொரோனா அலை பரவத் தொடங்கி உள்ளதா?” என்கிற கேள்வியும், குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான், சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்றைய தினம் முக்கிய ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரணியன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு, முக்கிய ஆலோசனை வழங்கினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், “கொரோனாவை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்” என்று, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

குறிப்பாக, “கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

முக்கியமாக, “தமிழகத்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும், தேவையான மற்றும் அவசியமான மாவட்டங்களில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், சுகாதாரத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.