மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் அடுத்ததாக அட்வெஞ்சர் திரைப்படமாக தயாராகி வருகிறது ஆடுஜீவிதம் திரைப்படம். இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகும் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் ஷாஜி காளிதாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்திருக்கும் கடுவா திரைப்படம் வருகிற ஜூன் 30-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் கோல்ட் திரைப்படம் அடுத்து ரிலீஸாக தயாராகி வருகிறது.

மோகன்லால் கதாநாயகனாக நடித்த லூசிஃபர் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த பிரித்விராஜ் இயக்கத்தில் 2வது படமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ப்ரோ டாடி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனது இயக்கத்தில் 3வது படமாக எம்புரான் திரைப்படத்தை பிரித்விராஜ் இயக்கவுள்ளார்.

இந்த வரிசையில் பிரித்விராஜின் இயக்கத்தில் 4-வது படமாக தயாராகவுள்ளது டைசன் திரைப்படம். கேஜிஎஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டைசன் திரைப்படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். முரளி கோபி கதை திரைக்கதை எழுதும் டைசன் திரைப்படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. டைசன் திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ…