பாகிஸ்தான் பெண் உளவாளியின் அழகில் மயங்கி, இந்திய ராணுவ ரகசியங்களைக் கொடுத்த ரயில்வே தபால் துறை அதிகாரி ஒருவர் அதிரடியாகக் கைது
செய்யப்பட்டு உள்ளார்.

சினிமாவில் நடப்பதைப் போலத்தான் இந்தியாவில் நிஜத்தில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தபால்களை பிரித்து அனுப்பும் பொறுப்பில் இருந்த பாரத் கோத்ரா என்ற உயர் அதிகாரி ஒருவர், ஃபேஸ்புக் மூலமாக அழகி
ஒருவருடன் அறிமுகமாகி இருக்கிறார். 

ஃபேஸ்புக்கில் அறிமுகமான அந்த இளம் பெண், மிகவும் கவர்ச்சியாகவும், யாரையும் மயக்கும் அளவுக்கு அழகியாகவும் தோற்றம் கொண்டதாக இருந்திருக்கிறார். 

அப்போது, ரயில்வே தபால் துறை அதிகாரி பாரத் கோத்ரா,  ஃபேஸ்புக்கில் அழகியுடன் பேசிய போது, “நான் போர்ட் பிளேரில் எம்.பி.பி.எஸ் படிப்பதாக” கூறி, அந்த
அதிகாரியை அந்த அழகி நம்ப வைத்திருக்கிறார். 

இதனையடுத்து, அவர்கள் இருவரும் தொடர்ந்து ஃபேஸ்புக் மெசேஞ்சரில் சாட்டிங் செய்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது செல்போன்
எண்களைப் பகிர்ந்துகொண்டு, “நேரில் சந்தித்துப் பேசி பழகலாம்” என்று, முடிவு செய்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, “வாட்ஸ்ஆப் வீடியோகாலில் அந்த பெண் பேசிய பேச்சால், சொக்கி போன அந்த அரசு அதிகாரி, தபாலில் வந்த ராணுவ தகவல் தொடர்பு
ஆவணங்களைப் படமெடுத்து அந்த அழகிக்கு வாட்ஸ்ஆப்பில்” அனுப்பி வைத்திருக்கிறார்.

“ராணுவத்தில் பணியாற்றும் தனது உறவினர் ஒருவர் இட மாறுதலுக்குத் தேவைப்படுவதாக” கூறி, இந்த ஆவணங்களை அந்த பெண் அழகி, அந்த
அதிகாரியிடமிருந்து பெற்றதாகவும்” கூறப்படுகிறது.

இந்திய ராணுவ ரகசிய ஆவணங்கள் வெளியான தகவல், எப்படியோ உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து, “இந்த இந்திய ராணுவ ரகசிய ஆவணங்கள் எப்படி, எங்கிருந்து வெளியானது” என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையின் முடிவில், ராணுவ புலனாய்வுப் பிரிவினரும், ராஜஸ்தான் மாநில உளவுப் பிரிவினரும் இணைந்து பாரத் பவாரியை தற்போது அதிரடியாகக்
கைது செய்து உள்ளனர்.

அத்துடன், அதிகாரிகள் விசாரணை நடத்தியதற்கு பிறகே, “பாகிஸ்தான் உளவு உளவாளியிடம் தாம் ஏமாந்த விசயமே” சம்மந்தப்பட்ட ரயில்வே தபால் துறை
அதிகாரிக்குத் தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து, அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரயில்வே தபால் துறை அதிகாரி பாரத் கோத்ரா, அதிரடியாகக் கைது செய்யப்பட்டு
இருக்கிறார். 

அவரிடம் ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முழுமையான விசாரணைக்கு பிறகே, பாகிஸ்தான் உளவு
உளவாளியான அந்த அழகியிடம், அவர் இன்னும் எந்த மாதிரியான ரகசியங்களை எல்லாம் கொடுத்திருக்கிறார் என்கிற உண்மையும் தெரிய வரும் என்றே
கூறப்படுகிறது. இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.