திருச்சியில் யூ டியூப் பிராங்க்ஸ்டருடன் ஏற்பட்ட காதலில் மோதம் ஏற்பட்டதால், கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 
எம்.எஸ்.சி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். 

அத்துடன் சோசியல் மீடியாவில் அதிகம் ஆர்வம் கொண்ட  இந்த இளம் பெண், யூ ட்யூப்பில் அதிகமாக பிராங் வீடியோக்களை பதிவு செய்து வந்த பிராங்க் பாஸ்  சூர்யா என்ற இளைஞனுடன் அவர் அறிமுகம் ஆகி, அவருடன் அந்த இளம் பெண் மிகவும் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், தனது தாயிடம் அடி வாங்குவது போன்று பிராங்க் செய்து பல்வேறு வீடியோக்களை யூ டியூப்பில் சூர்யா பதிவேற்றி வந்திருக்கிறார். இதன் மூலமாக, சமூக ஊடகங்களில் அவர் மிக அதிகமான கவனம் பெற்ற நிலையில், பலராலும் அறியப்பட்டவராகவும் திகழ்ந்து உள்ளார். 

இப்படியாக எளிதில் கிடைத்த இந்த புகழ் போதை காரணமாகவே, இளைஞர் சூரியா வேறு சில பெண்களுடனும் நெருங்கிய நட்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
இந்த விசயத்தைத் தெரிந்துகொண்ட சூரியாவின் காதலியான அந்த கல்லூரி மாணவி, சூர்யாவிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து சண்டை போட்டிருக்கிறார்.

இவர்களுக்கிடையேயான சண்டை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடைசியாகக் கடந்த 7 ஆம் தேதி மதியம், சூர்யாவுடன் அந்த மாணவி பேசியிருக்கிறார்.

அப்போது, அவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, மனமுடைந்து காணப்பட்ட நிலையில், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த மாணவி, தூக்கு மாட்டித் தொங்கி உள்ளார்.

அந்த நேரம் பார்த்து மாணவியின் பெற்றோர் வீட்டிற்குள் வந்து, தனது மகளின் நிலையைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த உள்ளனர். இதனால், பதறிப்போன மாணவியின் பெற்றோர், அவரை உடனடியாக கீழு இறக்கி உள்ளனர். எனினும், அவரை மயங்கிய நிலையில் மீட்டிருக்கிறார்கள். 

இதனையடுத்து, உடனடியாக அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதித்து உள்ளனர். மருத்துவமனையில் மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரை அரசு மருத்துவமனைக்குச் சேர்க்கும் படி பரிந்துரைத்து உள்ளனர்.

அதன்படி, அவர் உடனடியாக துவாக்குடி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட அந்த மாணவி கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், “இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக” கூறியுள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், கதறித் துடித்து உள்ளனர். மேலும், இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தாயார், அங்குள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரில் பேரில், யூ ட்யூப்பர் சூர்யா தான் தனது மகளின் இறப்புக்குக் காரணம் என்றும், அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த நவல்பட்டு காவல் நிலைய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சூர்யா தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், திருச்சி கல்லூரி மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக யூ ட்யூப்பர் சூரியாவை போலீசார் தேடி 
வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.