திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடுமையான மோதலில், மணமகன் தரப்பினர் 3 பேரை, மணமகள் தரப்பினர் 5
பேர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தண்டையார்பேட்டை அப்பலோ மருத்துவமனை அருகில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் மணமகன் 

தினகரன் என்பவருக்கும், கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணமகள் மஞ்சுளா என்பவருக்கும் இருவீட்டார் முறைப்படி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று
மாலை நடைபெற்றது. 

இந்த திருமண விழாவில், இரு வீட்டார் சார்பிலும் அவர்களது உறவினர்கள் மற்றும் இரு குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் என்று, சுற்றமும் நட்பும் புடை சூழ
வாழ்த்துவதற்கு வருகை தந்தனர்.

இந்த திருமண விழாவில், கலந்து கொண்ட இரு வீட்டாரும், நண்பர்களும் டிஜே பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடிய போது, மணமகளின் அண்ணன் வினோத் என்பவரின்
நண்பர்களுக்கும், மணமகனின் நண்பர்களுக்கும் இடையே திடீரென்று ஏற்பட்ட வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரு தரப்பினரிடையே மோதலும்  
ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இரு தரப்பினர் இடையே வாக்கு வாதம் முற்றிவிடவே, வெளியில் சென்ற வினோத்தின் நண்பர்கள் ஆகாஷ், ஜான், தோத்து, வசந்த் உள்ளிட்ட 10 பேர்
கொண்ட கும்பல் திடீரென திருமண மண்டபத்தின் உள்ளே புகுந்து, மணமகனின் நண்பர்களான தினேஷ், யுவராஜ், ஹேமந்த் ஆகியோரை கத்தியால் சரமாரியாக
குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதில், 3 பேரும் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்த விழுந்ததால், இதனைப் பார்த்த மண்டபத்தில் கூடியிருந்த இரு தரப்பு உறவினர்களும் கடும் அதிர்ச்சியும், பீதியும்
அடைந்தனர். 

மேலும், இது குறித்து உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, கத்தியால் குத்துப்பட்டவர்களை, அருகில் உள்ள அரசு ஸ்டான்லி
பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக்
கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 3 பேரையும் நேரில் சென்று சந்தித்த போலீசார், அவர்களிடம் வாக்கு மூலம் பெற்று, இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக
விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, மணமகன் தரப்பினர் 3 பேரை கத்தியால் குத்திய மணமகள் தரப்பினர் 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது
செய்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே திருமண வரவேற்பு விழாவில் பங்குபெற வேண்டும் என்று
அரசு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், மணமக்களின் நண்பர்கள் என பங்கேற்ற இருதரப்பினர் டான்ஸ் ஆடுவதில் மோதல் ஏற்பட்டு, குத்தி குத்து நடைபெற்ற
சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இரு தரப்பினரும் கடும் அதிர்ச்சியில் உரைந்துபோய் உள்ளனர்.