கொடூர குற்றவாளியான கள்ளக் காதலன் உடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, கணவன் சாப்பிட்ட உணவில் விஷம் வைத்து கணவனை கொலை செய்து விட்டு, “மதுவால் தான் என் கணவர் இறந்தார்” என்று மனைவி நாடகமாடிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை சூளைமேடு கண்ணகி தெருவைச் சேர்ந்த 40 வயதான செல்வம் என்பவர், அந்த பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு 38 வயதான விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இப்படியான சூழலில், செல்வம் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதன் காரணமாக, கணவன் மனைவியான செல்வம் - விஜயலட்சுமி தம்பதிகள் இடையே, அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்த நிழலில் தான், விஜயலட்சுமிக்கு 54 வயதான மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறிய நிலையில், அவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாகத் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

மனைவியின் கள்ளக் காதல் விசயம், எப்படியோ கணவன் செல்வத்திற்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த செல்வம், தனது மனைவியை அழைத்துக் கண்டித்து உள்ளார். இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அவரது மனைவி விஜயலட்சுமி, “கள்ளக் காதலுக்கு குறுக்கே நின்ற தனது கணவரை கொலை செய்ய” முடிவு செய்திருக்கிறார்.

அப்போது, “கணவன் சாப்பிடும் உணவில் பூச்சி மருந்து விஷம் கலந்து கொடுத்து” செல்வத்தை கொலை செய்ய கள்ளக் காதலன் மோகன், விஜயலட்சுமிக்கு திட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து, திட்டமிட்டபடியே கடந்த 2 ஆம் தேதி அன்று, செல்வம் சாப்பிட்ட கஞ்சியில் பூச்சி மருந்து விஷத்தை கலந்து விஜயலட்சுமி சாப்பிட கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த கஞ்சியைச் சாப்பிட்ட செல்வம், அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார்.

இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 6 ஆம் தேதி அன்று பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இதனால், “எனது கணவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், மயங்கி விழுந்து இறந்து விட்டதாக” அவரது மனைவி விஜயலட்சுமி அழுது புரண்டு ஒரு பெரிய  நாடகத்தையே நடத்தியிருக்கிறர்.

ஆனால், செல்வம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர் ஒருவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து சூளைமேடு போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, செல்வத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வெளியான நிலையில், “செல்வம் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து இருப்பது” தெரிய வந்தது. 

இதனால், செல்வம் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது, வெட்ட வெளிச்சமாக எல்லோருக்கும் தெரிய வந்தது. 

அதே நேரத்தில், தனது நாடகம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதால், குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு, விஜயலட்சுமி தனது காதலன் மோகனுடன் திடீரென்று தலைமறைவாகி உள்ளார்.

இது போலீசாருக்கு இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் விஜயலட்சுமி, அவரது கள்ளக் காதலன் மோகனுடன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். 

இது குறித்து போலீஸ் மேற்கொண்ட விசாரணையில், “விஜயலட்சுமி கணவனை கொலை செய்த குற்றத்தை” ஒப்புக்கொண்டார். 

அதே நேரத்தில், கைதான கள்ளக் காதலன் மோகன், மிகவும் கொடூர குற்றவாளி என்றும் போலீசர் தெரிவித்து உள்ளனர். இவர் மீது 7 கொலை வழக்குகள் மற்றும் 4
கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

அதன் தொடர்ச்சியாக, விஜயலட்சுமி மீதும், அவரது காதலன் மோகன் மீதும் சூளைமேடு போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொடூர கொலை சம்பவம், சென்னை சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.