விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக களமிறங்கியுள்ள லாஸ்லியா முன்னதாக ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதனையடுத்து விரைவில் வெளிவர உள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து நடித்துள்ள லாஸ்லியா, அடுத்து நடிக்கும் திரைப்படம் அன்னபூரணி. ஜெய்பீம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த லிஜோமொள் ஜோஸ் அன்னபூரணி திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் மெட்ராஸ், கபாலி, ரைட்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஹரி கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அன்னபூரணி படத்தை லயோனல் ஜோஸ்வா இயக்குகிறார். KH பிக்சர்ஸ் மற்றும் நேதாஜி Odo பிக்சர்ஸ் இணைந்து அன்னபூரணி திரைப்படத்தை தயாரிக்கிறது.

பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்நிலையில் அன்னபூரணி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னபூரணி திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.