கொரோனா 2 ஆம் அலை மிகப்பெரிய அளவில் பரவி வருவதால், நாடாளுமன்ற மாநிலங்களவை ஊழியர்கள் அனைவரும் வொர்க் ஃப்ரம் ஹோம் பணிக்கு மாற உதிரவிடப்பட்டு உள்ளனர்.

இந்தியா உட்பட உலக உலக நாடுகளில் கொரோனா 2 ஆம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் படி, கொரோனா இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால், டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

மும்பையில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும், பகல் பொழுதில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

முக்கியமாக, தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன.

அத்துடன், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்து உள்ளது. 

அதே நேரத்தில் இந்தியாவில் நேற்று வரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 89 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும், நாடு முழுவதும் தற்போது 20 லட்சத்து 31 ஆயிரத்து 977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில் தான், நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் வீரியமாக இருந்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட இருக்கும் சிகிச்சை முறைகள் குறித்தும் காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவர்களுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, உடனடியாக தடுப்பு முறைகள் குறித்து பலவேறு விசயங்கள் முன்வைக்கப்பட்டன.

இப்படியாக இந்தியாவில் கொரோனாவின் 2 ஆம் அலை, விஸ்வரூபம் எடுத்துள்ளதால், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது தினந்தோறும் 2 லட்சத்தைத் தாண்டுகிறது.

மிக முக்கியமாக தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளதாகவும், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 25 ஆயிரத்தை தாண்டி பரவி வருகிறது.

இப்படியாக கொரோனா பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் முழு நேர ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், நாடாளுமன்ற  மாநிலங்களவை ஊழியர்களை அனைவரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை, அவரவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “மாநிலங்களவையின் அனைத்து வகை ஊழியர்களும், இன்று முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை அவரவர் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும்” என்று, அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும், “பணியில் ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே, உயர் அலுவலர்களால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள்” என்றும், அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

இதனால், டிஜிட்டல் இந்தியாவில் முதன் முறையாக நாடாளுமன்ற மாநிலங்களவை ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற சொல்வது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.