கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கும் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.


இதனையடுத்து,  மும்பை மாநகரில் இருக்கும் ஜெயின் கோயில் ஒன்று கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக இருப்பது மகாராஷ்ட்டிரா. அதிலும் மும்பை மாநகரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தான் ஜெயின் கோயில் ஒன்று கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக மாறியிருக்கிறது.

இந்த மையத்தில் 100 படுக்கை வசதிகளும், 10 மருத்துவர்களும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டும் இந்த ஜெயின் கோயில் கொரோனா சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றப்பட்டது. 


கேரள மாநிலத்தில் கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 


தலைநகர் டெல்லியில் ஒரு வார காலம் முழு ஊரடங்கிற்கு மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்று இரவு முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு மிகவேகமாக அதிகரித்து வருவதால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த இன்று முதல் 15 நாட்களுக்கு அலுவலகங்கள் மற்றும் சந்தைகளை மூடுவது உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநிலத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கையை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.