உலகின் டாப் 100 பல்கலை கழகங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் 
பெற்றுள்ளன.

சென்னை ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கித் தவித்தாலும்; படிப்பிலும், அதன் கல்வித் தரத்திலும் என்றும் உயர்ந்து நிற்கின்றன. 

அதன் படி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங், கியூ.எஸ். உலக பல்கலைக் கழக தரவரிசை 2021 க்கான பட்டியலை முன்னதாக வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாகப் பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங், “கடந்த சில ஆண்டுகளாகவே, வளர்ச்சிக்கான தொடர்ச்சியான கவனம் மற்றும் இந்திய உயர் கல்வியில் சீர்திருத்தம் ஆகியவற்றை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது” என்று, குறிப்பிட்டார்.

“இதன் காரணமாக, இந்திய கல்வி நிலையங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் அடைந்து, உலக அளவில் புகழ் பெற்றுத் திகழும் கியூ.எஸ். போன்ற மதிப்புமிக்க தர வரிசையையும் பெற்றுள்ளதாக” புகழாரம் சூட்டினார். 

அத்துடன், “இந்த தரவரிசை மற்றும் தர மதிப்பீடானது, சர்வதேச சிறப்பு வாய்ந்த நிலையை நோக்கி செல்ல ஊக்கமளிக்கும் வகையில், இந்திய கல்வி நிலையங்களிடையே ஆரோக்கிய போட்டியை ஏற்படுத்தியுள்ளதாகவும்” மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் தெரிவித்தார்.

மேலும், “உலகின் டாப் 100 தர வரிசை பட்டியலில் பாம்பே ஐஐடி, டெல்லி ஐஐடி, சென்னை ஐஐடி, காரக்பூர் ஐஐடி, பெங்களூர் ஐஐடி, கவுகாத்தி ஐஐடி, பெங்களூர் ஐஐஎம், ஆமதாபாத் ஐஐஎம், ஜேஎன்யூ, அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகிய 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. 

குறிப்பாக, இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சென்னை ஐஐடி யானது, பெட்ரோலிய என்ஜினீயரிங் பிரிவில் உலக அளவில் 30 வது தரவரிசையைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறது என்றும், உலக அளவில் பாம்பே ஐஐடி யானது 41 வது இடம் பிடித்திருக்கிறது. 

இவற்றுடன், ஐஐடி. காரக்பூர் தாது பொருட்களுக்காக 44 வது இடமும் பிடித்து உள்ளன

அதே போல், டெல்லி பல்கலைக்கழகம் வளர்ச்சி படிப்புகளுக்காக உலக அளவில் 50 வது தரவரிசையைப் பெற்றுள்ளது” என்றும், மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.