கேரள உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவு சிபிஎம் , பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இளம் வேட்பாளர்களை அதிக அளவில் களம் இறக்கின. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், கேரள தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 சீட்டுகளில், சி.பி.எம் 53 சீட்டுகளை வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. பா.ஜ.க 35 சீட்டுகளையும், காங்கிரஸ் 10 சீட்டுகளையும் பிடித்தன.


இந்த தேர்தலில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக அறிவித்துள்ளது சிபிஎம் கட்சி. ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பிஎஸ்சி கணித மாணவியான ஆர்யா, எஸ்எஃப்ஐ மாநிலக் குழுவின் உறுப்பினர். சிபிஎம் கேசவதேவ் சாலைக் கிளைக் குழுவின் உறுப்பினராகவும், சி.பி.எம் கட்சியின் சிறுவர்கள் அமைப்பான பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இவர் உள்ளார். இவரது தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். தாய் ஸ்ரீலதா எல்.ஐ.சி ஏஜெண்டாகவும் உள்ளார்.


இதுகுறித்து ஆர்யா ராஜேந்திரன் கூறுகையில்,`` எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் அப்பா சி.பி.எம் கிளை உறுப்பினராக இருக்கிறார். நான் கட்சியில் பொறுப்பெடுத்து வேலை செய்வதற்கு என் தந்தை உறுதுணையாக இருந்தார். படிப்புடன் சேர்ந்து கவுன்சிலர் பணியையும் சிறப்பாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது எனது ஆசை. திருவனந்தபுரத்தில் குப்பைகளைக் கையாண்டு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வருவது ஆகியவற்றிக்கு  முக்கியத்துவம் தருவேன் ' என்கிறார் ஆர்யா.