அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ராணுவம் தற்போது வெளியிட்டுள்ள நிலையில், “மத்திய அரசின் பல திட்டங்கள் தொடக்கத்தில் எதிர்க்கப்படுவதாக” பிரதமர் நரேந்திர மோடி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு, மத்திய அரசு அறிவித்த “அக்னிபத்” திட்டத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இந்தியாவில் புரட்சி ஏற்பட்டது போல், இளைஞர்களின் போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெடித்து கிளம்பி உள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்ட போராட்டம் கிட்டதட்ட ஒரு ஆண்டு காலமாக மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில்,  “அக்னிபத்” திட்டத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தொடர்ந்து 6 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், முதல் 4 நாள் போராட்டமானது பெரும் வன்முறையாக வெடித்து கிளம்பியது.

அதாவது, “அக்னிபத்” திட்டத்தின்படி, “3 ஆண்டுகள் இதற்கான படிப்பை படித்து முடித்த பிறகு, வெறும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியில் இருக்க முடியும் என்றால், அந்த 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நாங்கள் என்ன செயய வேண்டும்?” போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மத்திய அரசைப் பார்த்து எதிர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதன்படி, மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி, தமிழகம் என்று, பல்வேறு மாநிலத்தில் பற்றிய போராட்டத் தீ, இன்று வரை 6 வது நாளாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர்ந்து தான் வருகிறது.

இந்த நிலையில் தான், இளைஞர்களின் போராட்டம் பற்றி கவலைப்படத மத்திய அரசு, “அக்னிபத்” திட்டத்தில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வருவதாகவும், இதனால் இந்த “அக்னிபத்” திட்டத்திற்கான அறிவிப்பாணையை தற்போது இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, “அக்னிபாத்  திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வு செய்வதற்கான பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்றும், விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அனைவரும்  https://joinindianarmy.nic.in என்கிற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் பதிவு செய்வது கட்டாயம்” என்றும்,  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “அக்னிவீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ராணுவத்தில், தனித்துவமான ரேங்க் வழங்கப்படும் என்றும், அது வழக்கத்தில் உள்ளதைப் போல் அல்லாமல், வித்தியாசமாக இருக்கும்” என்றும், ராணுவ தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், “அக்னிவீரர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும், அவர்களின் ஊதியத்தில் 30 சதவீதம் சேம நல நிதியாக பிடித்தம் செய்யப்படும்” என்றும், இந்திய ராணுவம் தற்போது அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் தான், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக பங்கேற்று பேசினார். 

அப்போது பேசிய பிரதமர் மோடி, “மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மாநகரமான பெங்களரூவில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக” குறிப்பிட்டார்.

அத்துடன், “சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும். ஆனால், காலப்போக்கில் அந்த முடிவுகள் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும்” என்றும், அக்னிபாத் திட்டம் குறித்து, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

இதனால், அக்னிபாத் திட்டம் குறித்து பிரதமர் மோடி பேசியது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.