கல்லூரிக்கு சென்று நேரடி வகுப்புகளில் பங்கேற்க பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் நெல்லிமார்லா பகுதியை சேர்ந்தவர் கொண்டபல்லி மனீஷா அஞ்சு. 16 வயதான இவர் ஸ்ரீககுளம் பகுதியில் உள்ள ராஜூவ் காந்தி யூனிவர்சிட்டி ஆஃப் நாலெஜ் டெக்னாலஜி என்ற கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். கொரோனா காரணமாக கல்லூரியில் சேர்ந்தது முதல் அவர் ஆன்லைன் மூலமே வகுப்புகளில் பங்கேற்று கல்வி பயின்று வந்தார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து ஆன்லைன் வகுப்புகள் முடிவுக்கு வந்து அவர் பயின்று வந்த கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் விருப்பப்பட்டால் நேரடியாக  வகுப்புகளில் பங்கேற்கலாம் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மனீஷாவை அவரது பெற்றோர் கல்லூரி விடுதியில் தங்கி நேரடி வகுப்புகளில் பங்கேற்கும்படி கூறினர். ஆனால், ஆன்லைனிலேயே வகுப்புகளில் பங்கேற்கிறேன், விடுதியில் தங்கி நேரடி வகுப்புகளில் பங்கேற்க விரும்பவில்லை என மனீஷா கூறினார். இதனை பொருட்படுத்தாத மனீஷாவின் பெற்றோர் அவரை கல்லூரிக்கு அழைத்து சென்று விடுதியில் தங்கவைத்தனர்.

அதனைத்தொடர்ந்து கல்லூரி விடுதிக்கு அழைத்து வரும் போது மனீஷா கோபத்தில் தன்னிடம் இருந்த செல்போனை பஸ்சில் இருந்து தூக்கி வீசியுள்ளார். அந்த செல்போனுக்கு பதிலாக மனீஷாவின் பெற்றோர் அவருக்கு புதிதாக செல்போன் ஒன்றையும் வாங்கி கொண்டுத்துள்ளனர். அதன்பின்னர் மனீஷா விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று நேரடி வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். இந்நிலையில், பெற்றோர் தனது விருப்பத்திற்கு மாறாக விடுதியில் தங்க வைத்து நேரடி வகுப்புகளில் பங்கேற்க்க வைத்ததால் கோபமடைந்த மனீஷா நேற்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மனீஷாவின் அறை நேற்று வெகுநேரமாக மூடியிருந்ததால் சந்தேகமடைந்த சக விடுதி மாணவிகள் அவரது அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த அறையில் மனீஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் இது குறித்து விடுதி காப்பாளரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தற்கொலை செய்துகொண்ட மனீஷாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும் தனது மகளின் தற்கொலை குறித்து அறிந்த மனீஷாவின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். கல்லூரிக்கு சென்று நேரடி வகுப்புகளில் பங்கேற்க பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.