முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதும்  “உங்களில் ஒருவன்” என்னும் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விழாவிற்கு சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்றைய தினம் தான் 45 வது புத்தக கண்காட்சி தொடங்கி உள்ளது. இந்த 45 வது புத்தக கண்காட்சியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்.

பின்னர், இந்த புத்தக கண்காட்சியில் ஐந்தாயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை ஆற்றங்கரை தொல்பொருள் காட்சி அரங்கை முதலமைச்சர் பார்வையிட்டார். பொருநை ஆற்றங்கரை பகுதிகளில் நடந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்கு காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.

இந்த விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைப்பாளர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.

இதனையடுத்து இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நூறாண்டு காலம் அடிமைப்பட்டிருந்த மக்களுக்கு, சுயமரியாதை சொல்லிக் கொடுத்து, புத்தகங்கள் அச்சிட்டு கொடுத்து அறிவுப்புரட்சி செய்த திராவிட இயக்கமே அறிவு இயக்கம் தான்” என்று, புகழாராம் சூட்டினார். 

“நான் எழுதிய சுயசரிதை நூலின் முதல் பாகத்தை, இந்த மாத இறுதியில் புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளேன் என்றும், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் காட்டிய புத்தக வழியிலான அறிவொளி பரப்பும் வழியில் தான் இந்த அரசு செயல்படுகிறது” என்றும், பெருமையோடு நினைவு கூர்ந்தார். 

அத்துடன், “தமிழர்களுக்கும், தமிழுக்கும் இந்த ஆட்சியில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதும்” என்றும், முதல்வர் பேசினார்.

இந்த நிலையில் தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதும்  “உங்களில் ஒருவன்” நூல் வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்பார் என்கிற புதிய தகவல்களும் வெளியாகி உள்ளன. 

அத்துடன், சமூக நீதிக்கூட்டமைப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 

மேலும், தேசிய அளவிலான தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் படி, “உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழாவிற்கு சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார் என்கிற செய்தியும் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, புத்தக விழாவில் பங்கேற்கும் தலைவர்களுடன் தேசிய அளவிலான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. 

இவைத் தரவி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், தேசிய அளவில் அடுத்து செய்ய வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் பல விஷயங்கள் பற்றி இந்த விழாவின் போது ஆலோசனை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, “உங்களில் ஒருவன்” நூல் வெளியீடு நிகழ்வானது, “நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமா?” என்றும் சிலர் கருத்து கூற தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.