ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும் அங்கு தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனாலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் தொடர்ந்து ஊடுருவ முயல்வதாகவே சொல்லப்படுகிறது. இதனால், அவர்களை கண்டறிந்து ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து ஊடுருவலைத் தடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாக, இன்று காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில் பான் சுங்கச் சாவடி அருகே இன்று (நவம்பர் 19) அதிகாலையில் ஒரு வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தீவிரவாதிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், போலீசாருடன் ராணுவத்தினரும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார்.அதிகாலையில் நடந்த இந்த என்கவுன்டர் காரணமாக ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடவடிக்கை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னராக கடந்த மாதம் (அக்டோபர்) இறுதியில், காஷ்மீரில் இதேபோல பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தது, இங்கே குறிப்பிடத்தக்கது.

அப்போதும், இதேபோல ஜம்மு-காஷ்மீரிலுள்ள ஒரு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. அதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

``பத்காம் மாவட்டத்தின் சதூரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்ததை யொட்டி பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) 7 மணியளவில் உள்ள சதூரா பகுதியில் அமைந்துள்ள மோச்வா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்கத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் இந்த தேடல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது.

இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இரு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட போராளிகளின் அடையாளம் மற்றும் எந்த தீவிரவாதக்குழுவைச் சேர்ந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டு தீவிரவாதி என்று தெரியவந்துள்ளது"

இப்படி தொடர்ந்து துப்பாக்கி சூடு நிகழ்ந்து வருவது, அப்பகுதி வாழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.