“அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என பொய் சொல்லி, இளைஞர்களை முதலமைச்சர் பழனிசாமி ஏமாற்றி விட்டார்” என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். 

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டன. 

பள்ளிகளுக்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதே போல, கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. 

அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, “கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள், முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள்” என தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. 

இதனையடுத்து, உற்சாக கொண்டாட்டத்தில் திளைத்த அரியர் வைத்திருந்த மாணவர்கள் பலர், “அரியர் மாணவர்களின் அரசனே.. ஐயா எடப்பாடியாரே.. அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி அய்யா!” என்று, தமிழகத்தின் பல இடங்களில் பல இளைஞர்களும் கட்டவுட் வைத்து முதலமைச்சர் பழனிசாமிக்கு, தங்களது நன்றிகளைத் தெரிவித்து வந்தனர். இது தொடர்பான கட்டவுட், மற்றும் போஸ்டர்கள் அனைத்தும், கடந்த காலங்களில் இணையத்தில் வைரலானது. 

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஏஐசிடிஇ தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரியர் தேர்வு ரத்து செய்வது தவறான முடிவு” என்றும், இதற்கு கடும் எதிர்ப்பும் அவர் தெரிவித்து வந்தார். இதனால், மாணவர்கள் மத்தியில் ஒரு குழப்பம் நிலவியது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் தற்போது வெடிக்கத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், “தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லூரி அரியர் மாணவர்கள், அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர அனுமதி 
மறுக்கப்படுவதாக” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

திமுக சார்பில் தருமபுரியில் நடைபெற்ற “தமிழகம் மீட்போம்” கூட்டத்தில், காணொலி காட்சி மூலம் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடைபெறுகிறது என்றே உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கே தெரியவில்லை” என்று குறிப்பிட்டார். 

“தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக கல்லூரிகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுவதற்கு, அதிமுக அரசு எதிர்ப்பு 
தெரிவிக்கவில்லை என்றும், அப்படி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது அந்த தவறுக்கு துணை போவதற்குச் சமம் என்றும்” அவர் கூறினார்.

குறிப்பாக, “அரியர் மாணவர்களை தேர்ச்சி எனக் கூறி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்களை ஏமாற்றி விட்டார்” என்றும், பகிரங்கமாக “அதற்கு காரணம், அந்த அரியர் மாணவர்கள் முதுகலை படிப்பில் சேர அனுமதி மறுக்கப்படுவதாகவும், மாணவர்களின் கல்வி தொடர்பாக எந்த மாதிரியான திட்டத்தைத் தமிழக அரசு கையாள்கிறது” என்றும், மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

இதனிடையே, மு.க.ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை, அரியர் மாணவர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல், “தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய எம்பிபிஎஸ் இடங்களைப் பிற மாநில மாணவர்களுக்கு ஏன் தாரை வார்த்துத் தரவேண்டும்?” என்று, திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.