பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தாலும், அதிமுக வில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தின் போது, அதாவது கடந்த 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு, கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று, தனி நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்துக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, தண்டனை ரத்து செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இறுதியில், நீதிபதி மைகேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா உயிரிழந்ததால், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்படி, குற்றச்சாட்டுக்கு ஆளான சசிகலா உட்பட 3 பேரும், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களாகச் சிறை தண்டனையை, சசிகலா தற்போது அனுபவித்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அபராதத் தொகையான 10.10 கோடி ரூபாயை வரையோலையாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு நேற்றைய தினம் 
செலுத்தியது. சசிகலா தரப்பு சமர்ப்பித்த 4 வங்கி வரைவோலைகளையும் பெங்களூர் தனி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அபராதத் தொகையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால், சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் கூறினார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணத்தின் படி, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சசிகலாவின் விடுதலை குறித்த செய்தி, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சசிகலா தரப்பில் அபராதம் செலுத்தினாலும் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பிறகே அவர் விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி தெரிவித்துள்ளார். சசிகலாவின் விடுதலை நாள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “நீட் தேர்வில் இருந்து யாருக்கும் விலக்கு கொடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார். 

“நீட் தேர்வு கூடாது என்பது தான் அதிமுக வின் நிலைப்பாடு என்றும், நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது” என்றும், அவர் கூறினார். 

அப்போது, சசிகலாவின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று, திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

இதனால், முதலமைச்சர் பழனிசாமி, சசிகலாவின் விடுதலை குறித்துப் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், அதிமுகவில் பேசும் பொருளாக மாறி உள்ளது.