பாலியல் வெறியால், சகோதரிகளான 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சிறுமி உயிருக்குப் போராடி வரும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடூரமான சம்பவம் மீண்டும் அரங்கேறி இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவையே உலுக்கியது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டன குரல்கள் எழுந்தன.

தற்போது, அதன் தொடர்ச்சியாக அதே மாதிரியான சம்பவம் மீண்டும் அரங்கேறி இருப்பது தான், பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் 3 பேர், தனது பெற்றோருடன் வசித்து வந்தனர்.

இவர்கள், தங்களது வீட்டில் மாடு வளர்த்து வந்தனர். இப்படியான சூழ்நிலையில், மாட்டுக்கு வைக்கும் தீவனம் முடிந்துவிட்டதால், மாட்டுக்கு தேவையான தீவனம் வாங்குவதற்காக, நேற்று முன் தினம் மதியம் கடை வீதிக்கு சகோதரிகள் 3 பேரும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். 

ஆனால், மாலை வரை அந்த சிறுமிகள் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சகோதரிகள் 3 பேரையும் அந்த பகுதி முழுவதும் தேடி அலைந்து உள்ளனர். அவர்களை பல இடங்களில் தேடிப்பார்த்தும், அவர்கள் எங்கேயும் கிடைக்கவில்லை. 

இதனால், அவர்களுக்குச் சொந்தமான வயலில் சென்று அந்த சிறுமிகளைத் தேடிப் பார்த்து உள்ளனர். அப்போது, சிறுமிகள் 3 பேரும் தங்களது சொந்த வயலில் துப்பட்டாவால் ஒன்றாக வாயில் கட்டப்பட்ட நிலையில், கிடந்ததைக் கண்டு பெற்றோரும், அவரது உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில், 2 சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்து உள்ளனர். மற்றொரு சிறுமி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில், தனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, போராடிக்கொண்டு இருந்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமிகளின் உடல்களைப் பார்த்துக் கதறி அழுதனர்.

இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடல்களைப் பார்த்து உள்ளனர். அப்போது, சகோதரிகள் 3 பேரும், மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, 3 பேரும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்து உள்ளனர். 

உடனடியாக, உயிரோடு இருக்கும் சிறுமியை மீட்ட போலீசார், உடனடியாக அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட இரு சிறுமிகளின் உடல்களும், பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிகளைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, மிக கொடூரமான முறையில் கொலை செய்தவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து மிக தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்து உள்ளனர்.