சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்கப்பட்ட இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும் திரையரங்கில் வெளியானதைப் போல பெரும் வரவேற்பைப் பெற்றது.

சூரரைப் போற்று படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஒரு விஷயம் நடந்தது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் ஆஸ்கர் நாமினேசனுக்கும் சென்ற பெருமை பெற்றது.

நீண்ட நாட்கள் கழித்து அவர் இந்த ஹிட் கொடுத்தாலும் பெரிய அளவில் அவரது நடிப்புக்காகப் பேசப்பட்டுள்ளார். இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்று தணிக்கையின் போது நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது அமேசன் பிரைமில் வெளியாகியுள்ளது. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 15ம் தேதி பூஜையுடன் துவங்கியது. பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி. இமான், ஹீரோயின் ப்ரியங்கா அருள்மோகன், சத்யராஜ் உள்ளிட்டோர் பூஜையில் கலந்து கொண்டார். தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதால் சூர்யா பூஜையில் கலந்து கொள்ளவில்லை.