குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட கூடாது : உயர் நீதிமன்றம்

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட கூடாது : உயர் நீதிமன்றம் - Daily news

பல்வேறு குற்றச்செயல்களில் இருப்பவர்களை அரசியல் கட்சிகளில் இணைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நடைப்பெற்ற விசாரனையில், புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் பின்புலத்துடன் ரவுடிகள் பலர் உலா வருவதாக தெரிவித்த நீதிபதிகள், குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்குள் நுழைந்து கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது வேதனையளிக்கிறது. குற்றப்பின்னணி கொண்டவர்களுக்குக் கட்சியில் இடமளிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கக் கூடாது. இதைத் தவிர்த்தால் மட்டுமே அரசியலைத் தூய்மைப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்தனர்.

குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழைந்து எம்.எல்.ஏ, அமைச்சர் உள்ளிட்ட பொறுப்பு வகிப்பது மக்களுக்குத் தவறான தகவலைக் கொண்டு சேர்க்கும் எனவும், இதைத் தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, குற்றப் பின்னணியுடன் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் எத்தனை பேர், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மகாராஷ்டிரம் போல புதுச்சேரியில் ரவுடி கும்பலை ஒழிக்க தனிச்சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதற்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

Leave a Comment