வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டாம் என  இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி விவகாரத்தை அடிப்படையாக வைத்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழகம் முழுக்க வேல் யாத்திரை நடத்த தயாராக உள்ளனர். இந்த வேல்யாத்திரையானது, நவம்பர் 6ம் தேதி திருத்தணியில் தொடங்கும், அங்கிருந்து முருகனின் அறுபடை வீடுகள் வழியாக திருச்செந்தூரில் டிசம்பர் 6ம் தேதி முடிவடைகிறது. இதனால் மதக்கலவரம் மற்றும் வன்முறைகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டுமெனவும் விசிக, மார்க்சிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை வலியுறுத்தியுள்ளன. ஆனால், பாஜகவின் வேல் யாத்திரைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தா.பாண்டியன், 'பாஜக நடத்தும் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாஜக வேல் யாத்திரை செல்லும் இடங்களில் பொது மக்களிடம் வரவேற்பு இருக்காது. கர்ணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது. வரவேற்பு இல்லாமல் பாஜக அவமானத்தை சந்திக்கட்டும்' என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு நாள் நிகழ்வுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், நான் வேல் தூக்கும்போது அனைவரும் இழிவாகப் பேசினார்கள். அப்போது சீமானுக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. அப்போதும் பாஜக இருந்தது. இப்போது தமிழகத்தில் வேல் யாத்திரை மூலமாக இடம்பிடிக்க பாஜக நினைக்கிறது. ஆனால் அந்த வேலை வைத்தே அரசியல் களத்தில் பாஜகவை வீழ்த்துவோம்' என்று அவர் தெரிவித்தார்.