13 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகி - காவல் ஆய்வாளர் வழக்கு.. டிஎஸ்பி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சிக்குவதாக அதிர்ச்சி தகவல்..

13 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகி - காவல் ஆய்வாளர் வழக்கு.. டிஎஸ்பி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சிக்குவதாக அதிர்ச்சி தகவல்.. - Daily news

13 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகி - காவல் ஆய்வாளர் வழக்குில் அதிரடி திருப்பமாக  ஓய்வு பெற்ற டிஎஸ்பி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர், தனது 13 வயது மகளுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது, தனது குடும்பத்தின் வறுமை காரணமாக அந்த சிறுமி, வியாசர்பாடி சிக்னலில் பேனா, பென்சில் வாய்ப்பாடு, போன்ற பொருட்களை விற்று வந்தார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாயைக் காப்பாற்றி வந்தார். 

அதே நேரத்தில், அந்த 13 வயது சிறுமியின் தாயின் அக்கா மகளான ஷாகிதா பானு என்ற பெண், ஏற்கனவே திருமணமான நிலையில், தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த மதன் குமார் என்பவரை, அந்த பெண் 2 வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷாகிதா பானு, தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அதனால் தனக்கு உதவியாகத் தங்கையை அனுப்பி வைக்குமாறும் சிறுமியின் தாயாரிடம் கேட்டு உள்ளார். இதனால், வேறு வழியின்றி தனது பெரியம்மாவின் மகளான ஷாகிதா பானுவின் வீட்டுக்குத் தனது 13 வயது மகளை அனுப்பி வைத்தார்.

மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சகோதரி வீட்டுக்கு சென்ற மகள், தற்போது வரை வீடு திரும்பாத நிலையில், ஷாகிதா பானுவின் கணவன் மதன் குமாரிடம், “தனது மகளை திருப்பி அனுப்பி வைக்கும் படி” சிறுமியின் தாயார் கேட்டு உள்ளார். ஆனால், இதற்கு மதன் குமாரும் அவரது மனைவியுமான ஷாகிதா பானுவும் மறுத்து உள்ளனர். தனது மகள் திரும்பி வராத நிலையில், சிறுமியின் தாய் அந்த வீட்டிற்கு நேரில் சென்று அவர்களிடம் சண்டை போட்டுவிட்டு, தனது மகளை மீட்டு வந்து உள்ளார்.

சிறுமி வீட்டிற்கு வந்தது முதல், சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் காணப்பட்டு இருக்கின்றன. இதனை கவனித்த சிறுமியின் தாயார், சிறுமியிடம் விசாரித்து உள்ளார். அப்போது சிறுமியின் அக்காவான ஷாகிதா பானுவும், அக்காவின் கணவரான மதன் குமாரும் சிறுமியை மிரட்டி பலவந்தமாக பாலியல் தொழிலில் தள்ளியது தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், இது குறித்து கடந்த 10 ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையின் படி, ஷாகிதா பானு மற்றும் அவரது கணவர் மதன் குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் படி, “ஷாகிதா பானு அவரது கணவர் மதன் குமார் மற்றும் மதன் குமாரின் தங்கை சந்தியா ஆகியோர் சிறுமியை மிரட்டி பாலியல் தொழில் பயிற்சி கொடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும்” தெரிய வந்தது. 

அத்துடன், “மதன் குமாரின் நண்பர்கள் மற்றும் மதன் குமாரின் சகோதரியான சந்தியாவின் நண்பர்கள் என மாறி மாறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும்” கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில், கடந்த 12 ஆம் தேதி சிறுமியின் அக்காவான ஷாகிதா பானு, மதன்குமார், அவரின் தங்கை சந்தியா, வனிதா, விஜயா, செல்வி, மகேஸ்வரி, கார்த்தி ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர். அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ள வாக்கு மூலத்தில், “போலீசார் ஒருவர் மது போதையில் என்னை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாக” கூறியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மகளிர் போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “பாலியல் தொழில் செய்து வந்த சந்தியாவின் ரெகுலர் கஸ்டமரான காசிமேடு பகுதியைச் சேர்ந்த பாஜக வட சென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் என்பவரிடம் அதிக பணத்திற்குச் சிறுமியை அனுப்பி வைத்தது” தெரிய வந்தது. இதனையடுத்து, பாஜக வட சென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரனும், எண்ணூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளரான புகழேந்தியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அவர்கள் இருவரும் சேர்ந்து சிறுமியை மது போதையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும்” தெரிய வந்தது. அதே போல், “ராஜேந்திரனின் மற்றொரு நண்பரான சென்ட்ரல் ரயில் நிலைய ஊழியரான காமேஸ்வரன் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் புகழேந்தியை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதனால், போலீசார் வட்டாரத்தில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 11 பேர் வரை கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த வழக்கில் பாலியல் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஷகிதா பானு, மதன் குமார், சந்தியா, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோரின் செல்போனை ஆய்வு செய்தபோது, பல நபர்களிடம் இவர்கள் சிறுமியை வைத்து விலை பேசுவதும் தெரிய வந்தது.

மேலும், டி.எஸ்.பி அந்தஸ்தில் இருந்து ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஒருவரும், தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் 2 காவல் ஆய்வாளர்கள், 2  மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவத்தில், சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ள நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தோர்களின் பட்டியலை 4 காவல் ஆய்வாளர்கள் வரை விசாரித்து வருவதாகவும், விரைவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல முக்கியப் பிரமுகர்களும் அரசு அதிகாரிகளும் கைது செய்யப்படலாம் எனவும் காவல் துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனால், இந்த வழக்கு தற்போது போலீசார் மத்தியில் புயலைக் கிளப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment