சாஹோ திரைப்படத்தைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணா இயக்கத்தில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். அவரது 20ஆவது படமான இந்தப் படத்தை, யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதில், பிரபாஸிற்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ராதே ஷ்யாம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே தெலுங்கு சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. ராதே ஷ்யாம் படத்தின் இந்தி பதிப்பிற்கு மிதுன் இரு பாடல்களுக்கும், மனன் பரத்வாஜ் ஒரு பாடலுக்கும் இசையமைத்துள்ளனர். பிரபல கவிஞர்களான குமார் மற்றும் மனோஜ் முன்தஷிர் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பதிப்பிற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, கிருஷ்ண காந்த் பாடல் வரிகளை எழுதியுள்ளார். 

இப்படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழுவினர் அதில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 30 என அறிவித்துள்ளனர். இதனை அடுத்து பிரபாஸ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் தற்போது அந்த படத்தில் இருந்து சூப்பரான ஒரு சின்ன டீசரை படக்குழு வெளியிட்டு வைரலாக்கி வருகிறது. நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் ரொமான்டிக் காட்சி விழிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

வெளிநாட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. காதல் படமாக இருந்தாலும் பிரபாஸ் நடிப்பதால், அதிலும் பிரம்மாண்டம் இருக்கத் தானே செய்யும். உனக்கென்ன ரோமியோன்னு நினைப்பா என நாயகி பூஜா கேட்க, ச்சே.. அவரு காதலுக்காக செத்துட்டாரு.. எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை என பிரபாஸ் சொல்லும் வசனம் வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் பிரபாஸ் ரசிகர்கள்.