கடந்த மாதம், கேரளாவில் அன்னாசிப் பழத்தில் வெடி வைத்திருந்து, அதைக் கடித்துத் தின்ற யானையொன்று இறந்த சம்பவம் மிகப்பெரும் சர்ச்சையாக ஆகியிருந்தது. வனவிலங்கு ஆர்வலர்கள் பலரும், இதுகுறித்து பேசியிருந்தனர். அந்த நேரத்தில் மிருகங்களையும் மனிதத்தன்மையோடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள், வலுத்தன.

                                                     

இதற்கிடையில் இப்போது சத்தியமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டொன்றை கடித்த பசு மாட்டின் தாடை சிதைந்து உயிருக்குப் போராடி இறந்துள்ளது. சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குமாரசாமி என்பவர், தனக்குச் சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாடுகள் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு அப்பகுதியில் சென்று பார்த்தபோது ஒரு பசுமாடு முகத்தின் தாடை சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதைக்கண்ட குமாரசாமி, உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். விசாரணையில், காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக மேய்ச்சல் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு புதைத்த அவுட்டுக்காயை, பசு மாடு கடித்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், அதனலாதான் தாடை சிதைந்தது என்றும் தெரியவந்தது. கடந்த மாதம் ஏற்பட்ட கேரள யானை விவகாரத்தில், வெடிகுண்டு புதைத்த அன்னாசியை யானை விழுங்கியிருந்து குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தொடர்ந்து இப்படி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக, நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையில், தாடை சிதைந்த தனது பசு மாட்டிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவங்கள் குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மாடு மட்டுமில்லாமல், புல் மேயும்போது வாயில் சிக்கி வெடிப்பதால் பல ஆடு, மாடுகள் பலியாகின்றன என குற்றச்சாட்டை வைக்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள். வேட்டை கும்பலின் இந்த நடவடிக்கைகள் யாவும்  தொடர் கதையாக மாறியுள்ளதாகவும், அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைக்கிறார்கள். 

இதுவரை விலங்குகள் மீதான மனிதர்களின் தாக்குதல்கள் சில, இங்கே உங்கள் பார்வைக்கு...!

2014 

ஜனவரி : ஊட்டி மலைப்பகுதியில் வளர்ப்பு பிராணிகளையும், மக்களையும் அச்சுறுத்தி வந்ததாக வனத்துறையினரால் புலி சுட்டுக் கொல்லப்பட்டது. 

2015 
பிப்ரவரி :  நீலகிரியில் ஐந்து நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த புலியை அதிரடிப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

2016 

மார்ச் : நீலகிரி மாவட்டம் கூடலூரில் மனிதர்களை அச்சுறுத்தி வந்த 10 வயதான புலி அதிரடிப் படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டது. (இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 3 புலிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.) 

ஜூலை : குன்றத்தூரில், 5 மாதம் ஆன நாய்க்குட்டியை வீட்டின் 4-வது மாடியில் இருந்து வாலிபர் ஒருவர் தூக்கி வீசி கொடுமைப்படுத்தினர்.

செப்டம்பர் : கேரளாவில் உள்ள கோட்டையத்தில், கேரள காங்கிரஸ் (எம்) இளைஞரணியினர் தெரு நாய்களை அடித்துக் கொன்று ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். (மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் இருப்பதாகக் கொல்லப்பட்டது எனக் கூறப்பட்டது) 

ஜூலை :  ஐதராபாத்தில் 3 நாய்க்குட்டிகளை உயிரோடு எரித்த 8 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
நவம்பர் : வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நான்கு மருத்துவ மாணவர்கள், பெண் குரங்கைப் பிடித்து சித்திரவதை செய்து   கொன்று புதைத்துள்ளனர். 

டிசம்பர் : சென்னை போரூர் பகுதியில் நாயின் வாலை வெட்டியதாக 4 இளைஞர்களைக் கைது செய்தனர்.

2017

ஜூன் : ஆம்பூரில், நாய்க்கு வெறிபிடித்து அப்பகுதி மக்களை கடித்ததால் அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாயை அடித்துக் கொன்றனர்.

ஜூலை : குஜராத்தின் போடாக மாவட்டத்தில் உள்ள ரோஜ்மால் கிராமத்திற்கு உணவு தேடு வந்த 3 வயது சிறுத்தையைக் கிராம மக்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொன்றனர்.

இதில் காயமடைந்த சிறுத்தை சம்பவ இடத்திலேயே இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் வந்து கால்நடைகளை அடித்து விடுவதால் அதனை கொன்றதாகக் கிராமத்தினர் கூறுகின்றனர். சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் : சென்னை ராயப்பேட்டையில், மகனைப் பார்த்து குரைத்ததால் ஆறுமுகம் என்பவர் கிரிக்கெட் மட்டையினால் நாயை அடித்து கொன்றார்.

ஆகஸ்ட் : சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இருவர், நாய் ஒன்றை 3-வது  மாடியிலிருந்து தூக்கி எறிந்தனர். 

2018

மார்ச் : பெங்களூரில் பெண் ஒருவர் நாய்க்கு பாடம் புகட்டுவதாக கூறி 8 நாய்க்குட்டிகளை தன் தாயின் கண் எதிரே கல்லால் அடித்து கொலை செய்தார். 

ஆகஸ்ட் : மதுரை மதுராந்தகத்தில்  நெல்லில் விஷம் கலந்து 43 மயில்கள் கொல்லப்பட்டது.

அக்டோபர் : ஹைதராபாத்தில் பசியால் தண்ணீர் குடித்ததற்காக தெருவோர சாப்பாட்டு கடைக்காரர் நாயை அடித்து கொன்றுள்ளார். 

நவம்பர் :  திருச்சியில் உள்ள பாலக்கரை அருகேயுள்ள கீழப்புதூர் என்ற பகுதியில் மர்மமான முறையில் 15-க்கும் அதிகமான நாய்கள் இறந்தன. அப்பகுதி மக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

நவம்பர் :  மஹாராஷ்டிராவில் 13 பேரை கொன்றதாகக் கூறப்பட்ட பெண் புலி வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது.

நவம்பர் :  ஐதராபாத்தில் தாய் நாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகள் எரித்துக் கொலை செய்யப்பட்டது. 

2019

ஜனவரி : இலங்கையில் உள்ள பலாங்கொடை மஸ்சென்ன பகுதியில்,  50 வயதான நபர் பாலியல் துன்புறுத்தல் செய்து நாயைக் கொலை செய்துள்ளார். 
 
ஜூலை :  உத்தரகண்ட் மாநிலத்தில், மருத்துவக் கல்லுாரி கட்டடத்திற்குள் பதுங்கி, மூன்று நாட்களாக அலைக்கழித்த சிறுத்தை, சுட்டுக் கொல்லப்பட்டது.

ஜூலை : உத்தரப் பிரதேசத்தில் கிராம மக்கள் சேர்ந்து 6 வயது பெண் புலியை அடித்துக் கொன்றனர். கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கியதால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

ஆகஸ்ட் : வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலியை 6 இளைஞர்கள் கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தினர். (6  பேருக்கும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.)

டிசம்பர் : ராமநாதபுரம் மாவட்டத்தில் இரை தேடி வந்த 12 மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது.

2020ம் ஆண்டும், இப்படியான நிகழ்வுகள் நின்றபாடில்லை. விலங்குகள் எதுவும், தானாக இறப்பதில்லை. அவை, கொல்லப்படுகிறது என்றே இந்த சம்பவங்கள் நமக்குச் சொல்கின்றன.

- பெ. மதலை ஆரோன்