கணவனை பிரிந்து வாழும் மனைவிகளை குறிவைத்து மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

பணம், அதற்காகத் தான் இவ்வுலகில் அத்தனை பேரும் வேலைக்குச் சென்று வந்துகொண்டிருக்கிறோம். பணம், அதை மையப்படுத்தித் தான், இவ்வுலக மாந்தர்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பணம் அதை மையப்படுத்தித் தான், இவ்வுலகில் அவ்வளவு குற்றங்களும் அரங்கேறுகின்றன என்று சொன்னால், அது மிகை ஆகாது. அந்த பணத்தை சம்பாதிக்கும் வழியாதென்பதில் தான், ஒவ்வொரு மனிதனின் ஆற்றலும், அவன் சுபாவங்களும் அடங்கி இருக்கிறது என்று சொன்னாலும், அதையும் நம்பித்தான் ஆக வேண்டும். 

இப்படி பணத்தை மையமாக வைத்து, வழிப்பறி, கொள்ளை, திருட்டு, அதிக பட்சமாக கொலை என்று பார்த்த கடந்த கால உலகம், தற்போது அதில் சற்று முன்னேற்றம் கண்டவாறு, பெண்களின் அங்கங்களை ஆபாசமாக சித்தரித்தும், பெண்களைப் போதை பொருளாக மாற்றியுமே பணம் பறிக்கும் புதிய யுத்திகளை, நவீனக் கால திருடர்கள் கடைப் பிடித்து வரும் புதிய வழிமுறையாக இருக்கிறது. அப்படிப்பட்டது தான், பொள்ளாச்சி பாலியல் வழக்கு. அப்படிப்பட்டது தான் நாகர்கோவில் காசி வழக்கு. அதே போன்ற ஒரு மாபெரும் மிரட்டல் கும்பல் தற்போது ராமநாதபுரம் அருகே சிக்கி இருக்கிறது போலீசாரிடம்.

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் சிறப்பு தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து அப்பாவி பெண் ஒருவர், அதிர்ச்சி ஊட்டும் புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், “கணவனை பிரிந்து வாழும் மனைவிகளை குறி வைத்தும், வெளி நாட்டில் வேலை பார்ப்பவர்களின் மனைவிகளைக் குறி வைத்தும், ஒரு கும்பல் பெண்களை மிகவும் ஆபாசமாகப் படம் எடுத்து, தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வருவதாக” அதிர்ச்சி ஊட்டினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த காவல் கண்காணிப்பாளர், அந்த பெண்ணை நேரில் வரவைத்து, விசாரணை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட அந்த பெண்  ஏர்வாடி பகுதியில் வசித்து வருவதாகவும், கணவரால் கை விடப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. 

அவர் அளித்த புகாரின் படி, “ஏர்வாடி பகுதியில் செயல்பட்டுவரும் ஏர்பாத் நெட் கபே என்கிற செல்போன் ரீசார்ஜ் கடையை பாதுஷா, ஹாஜி ஆகிய இருவரும் நடத்தி வருகின்றனர். இந்தக் கடையில் சகாபுதீன் என்பவர் வேலை செய்து வருகிறார். குறிப்பிட்ட அந்த கடையில், செல்போன் ரீசார்ஜ் மட்டும் இன்றி பிறப்பு - இறப்பு, ஓட்டுநர் உள்ளிட்ட அரசுச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள், என இ சேவை மையம் போலவே அந்த கடை செயல்பட்டு வந்துள்ளது.

குறிப்பாக, சில சட்ட விரோத லாட்டரி மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகளிலும் அந்த கடை செயல்பட்டு வருவதாகவும்” அவர் குற்றம் சாட்டினார்.அத்துடன், அந்தக் கடையில் பணிபுரிந்த சகாபுதீன், கணவரால் கை விடப்பட்ட என்னை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, என்னை முழுவதுமாக பயன் படுத்திக்கொண்டார் என்றும், அவர் கடையின் உரிமையாளரிடம் வாங்கிய 10 லட்சம் ரூபாய் கடனை தொகையை அடைக்க உதவி செய்யுமாறு கேட்டதாகவும்” அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சகாபுதீன் பணம் கேட்டது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நிலையில், “பணம் தர வில்லை என்றால், என்னுடைய ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று, அவர் மிரட்டியதாகவும்” புகார் அளித்தார்.

குறிப்பாக, இந்த மிரட்டல் விவகாரத்தில், அந்த குறிப்பிட்ட செல்போன் கடையின் உரிமையாளர்களான பாதுஷா, ஹாஜி, ஆகியோரும் கூட்டு சேர்ந்தே, சகாபுதீன் மூலமாக மிரட்டி வருவதாகவும்” பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டி உள்ளார்.
 
அத்துடன், “என்னுடைய ஆபாசப் புகைப் படங்களை வெளிநாட்டில் உள்ள ஆலிம் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும், அவர் மூலம் ஏர்வாடியில் உள்ள சிலருக்கு அந்த புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளனர்” என்றும் அவர் கண்ணீர் மல்க புகார் கூறினார்.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தனிப்படை அமைத்து உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மோசடி கும்பல் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  

அப்போது, “கணவர் வெளிநாட்டில் இருக்கும் பெண்களைக் குறி வைத்தும், கடைக்கு ரீசார்ஜ் செய்யும் போது அவர்களின் செல்போன்களில் 'Any desk' என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாகவே குறிப்பிட்ட சில பெண்களின் ஆபாச புகைப் படங்களை எடுத்து வைத்துக் கொண்டு, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதும்” போலீசாருக்கு தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து, பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த பாதுஷா, சகாபுதீன் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், 1 லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, இவர்களைச் சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, கணவனைப் பிரிந்து வாழும் மனைவிகளை குறிவைத்து மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.