காதலித்து ஏமாற்றிய காதலனை கைது செய்ய வலியுறுத்தி கர்ப்பிணிப் பெண் ஒருவர், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பகவான் பட்டியைச் சேர்ந்த 22 வயதான ராம்கி, கவரப் பட்டியைச் சேர்ந்த தனது மாமன் மகள் உறவு முறை கொண்ட இளம் பெண்ணை ஒருவரை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகக் காதலித்து வந்துள்ளார். இருவரும் விரும்பி காதலித்து வந்த நிலையில், காதலின் அதீத அன்பால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த இளம் பெண் கரு உற்ற நிலையில், அந்த பெண்ணின் வயிற்றில் 5 மாத கரு வளர்ந்துள்ளது. வயிற்றில் 5 மாத கரு வளர்வதால், தன்னை உடடினயாக திருமணம் செய்துகொள்ளும் படி, அந்த இளம் பெண் ராம்கியை வலியுறுத்தி உள்ளார். ஆனால், இதனை ஏற்க மறுத்த ராம்கி, அந்த பெண்ணை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அந்த பெண் ராம்கியிடம் கெஞ்சி உள்ளார். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத, அவர் தன் செல்போனை சுவிட் ஆப் செய்து விட்டு, தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது.

இதனால், தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த அந்த பெண், “தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டுத் தலைமறைவான ராம்கியை கைது செய்யக் கோரி” அந்த பெண் கடந்த மாதம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஆனால், இது வரை அந்த இளைஞர் கைது செய்யப்படாமல் இருந்துள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த பெண், தனது பெற்றோருடன் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்து, காவல் நிலையம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மெத்தனமாகச் செயல்படும் போலீசாரை கண்டித்தும், தன்னை ஏமாற்றிய காதலனைக் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட இளம் பெண் கோரிக்கை விடுத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா, தலைமறைவாக இருக்கும் இளைஞரை இன்னும் 2 நாட்களில் கைது செய்வதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, போலீசாரின் கோரிக்கையை ஏற்று, அந்த பெண் தர்ணா போராட்டத்தை கை விட்டு, கலைந்து சென்றார்.  

இதனிடையே, காதலித்து ஏமாற்றிய காதலனைக் கைது செய்ய வலியுறுத்தி கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், கோவையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 65 வயது முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் புலிய குளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதான வரத ராஜன், தன் வீட்டிற்கு அருகிலேயே காய்கறி வியாபாரம் செய்து வரும் தனது உறவினர்களான ஒரு தம்பதிகளுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

காய்கறி வியாபாரம் செய்து வரும் தம்பதிக்கு, 7 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டு வந்தார். தற்போது கொரோனா காலம் என்பதால், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளார். 

இதனிடையே, இந்த தம்பதியினர் காய்கறி வியாபாரம் தொடர்பாக கோவை பீள மேட்டிற்கு அடிக்கடி சென்று வர வேண்டிய நிலை இருந்துள்ளது. இதன் காரணமாக, தங்களுடைய 7 வயது சிறுமியை, அப்பத்து வீட்டில் உள்ள உறவினரான 65 வயதான முதியவர் வரதராஜனை நம்பி, அவரின் பொறுப்பில் விட்டு விட்டு, கடந்த ஒரு வாரமாக வேலைக்காக சென்றுள்ளனர். 

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட முதியவர் வரதராஜன், கடந்த ஒரு வாரக் காலமாகவே சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பாலியல் சில்மிசங்கள் அதிகமானால், ஒரு கட்டத்தில் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி, தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி கண்ணீருடன் கூறி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் அந்த முதியவர் மீது புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முதியவர் வரதராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.