கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் மக்கள் கண்டிப்பாக இ பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள், ஊரடங்கின் தொடக்க காலத்தில் அறிவுறுத்தின. இதையடுத்து மத்திய அரசு இ பாஸ் முறையைக் கட்டாயமாக்க வேண்டாம் என்று தளர்வு அளித்த நிலையில் தமிழகத்தில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இ பாஸ் முறை ரத்தானது.

பொருளாதார தேவைகளுக்காக, பல தளர்வுகள் அறிவுறுத்தப்பட்ட போதிலும்கூட, மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ பாஸ் முறை கட்டாயமாக அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காகச் சென்னை விமான நிலையத்தில், வருகை பகுதியில் தமிழக அரசின் வருவாய்த் துறையினர் இ பாஸ் கவுண்ட்டர்கள் அமைத்திருந்தனர். இதன்மூலம் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் இங்கு இ பாஸ் பெற்றுதான் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்வர் என்ற நடைமுறை இருந்து வந்தது.

ஆனால் கடந்த 19ஆம் தேதி மாலை முதல் மாநில அரசு அமைத்திருந்த இ பாஸ் கவுண்ட்டர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டன. ஆன்லைனில் இ பாஸ் பெற்று வெளியே செல்லும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆன்லைனில் சரியாக இ பாஸ் கிடைக்காததால் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதில் பயணிகள் சிக்கல்களை அனுபவித்து வந்தனர். பயணிகளுக்கும் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டன.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளும் இ-பாஸ் கட்டாயமாக வாங்க வேண்டும். இல்லாவிட்டால் விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. 

விமான பயணிகளுக்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் இ-பாஸ் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு மாநில வருவாய் துறை அதிகாரிகள் பணியில் இருந்து விமான பயணிகளுக்கு இ-பாஸ்களை வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் பயணிகள் பலர் மாநில அரசுக்கும், சென்னை விமான நிலையத்திற்கும் இமெயில் மூலம் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளனர். இந்தச் சூழலில் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் இ பாஸ் கவுண்ட்டர்கள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த் துறையினர் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு இ பாஸ் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது கடந்த இரண்டு நாட்களாக அவதிப்பட்ட விமானப் பயணிகளுக்குச் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வரும் பயணிகள் ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பித்து பெற்று கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாயினர். மீண்டும் விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களை திறக்கவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் கோரிக்கையை ஏற்று நேற்று மாலை முதல் இ-பாஸ் கவுண்ட்டர்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் 2 நாட்களாக அவதிப்பட்டு வந்த வெளிமாநில பயணிகள் நிம்மதி அடைந்தனர்.