கொரோனா பரவலை தொடர்ந்து, நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ஆம்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இடையிடையே பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும், பள்ளிகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்கவும், மின்சார ரயில்கள் இயக்கவும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழகத்தில் லாக்டவுன் உத்தரவு வருகின்ற 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மேலும் லாக்டவுன் நீடிப்பது குறித்தும் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது பற்றியும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி வழியாக இன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும், பல்வேறு புதிய தளர்வுகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த மாத தொடக்கத்தில் மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
 
தளர்வுகளால் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது பற்றியும், மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவது, கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்ற பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேசமயம், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியன தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மருத்துவ நிபுணா்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி விவாதிப்பாா் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்களிடம் பேசிய முதல்வர், பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பண்டிகையொட்டி மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்திட மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஒப்பிட்ட பிற மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. திரையரங்குகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர் குழு வழங்கும் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் மலைப்பாங்கான மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய தார்ப்பாய்களை வைத்திருக்க வேண்டும். கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

பருவமழைக்காலத்தில் அவசர கால முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். டெங்கு உள்ளிட்ட பருவகால நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவிட் சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து தேவைகளை பூர்த்தி செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதைத் தொடர்ந்து கந்த சஷ்டி பண்டிகையும், திருக்கார்த்திகை தீப திருவிழாவும் வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, தியேட்டர்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.