கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அப்போது, அம்மா நகரும் நியாயவிலை கடை திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இதனை அடுத்து தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் உருவாக்கப்பட்டன. இந்த  நகரும் நியாயவிலை கடை வாகனங்களை முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொது விநியோகத் திட்டத்தில் திருச்சியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். சிசிடிவி, ஜிபிஎஸ் உடன் மின்சாரம், சூரியசக்தியில் இயங்கும் 13 ஆட்டோ சேவையையும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக அறிமுகப்படுத்தினார். அவற்றில் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமிண்ட் போன்ற பல்வேறு திட்டங்கள் அடங்கும். இவற்றில் அம்மா உணவகம் ஏழை, எளிய மக்களின் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

அதே போல ரூ. 10-க்கு வழங்கப்படும் அம்மா குடிநீர் வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இன்றளவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. 

தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது அவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு 3,501 அம்மா நகரும் ரேசன் கடைகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த வகையில் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் மலைவாழ் மக்கள் பயன்பெறுகின்ற வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் ஒரு புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இன்று அமல்படுத்துகிறது. இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம், காஞ்சிபுரம் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த, நேற்று விற்பனையாளர்களுக்கு கருவிகளை வழங்கினார் காஞ்சி மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை எவ்வாறுபயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சிகளும், விளக்கங்களும் ஏற்கெனவே ஆட்சியர் பா.பொன்னையா முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து இந்தமுறையை காஞ்சி மாவட்டத்தில் உள்ளஅனைத்து ரேஷன் கடைகளில் அமல்படுத்தமுடிவு செய்யப்பட்டு, பயோமெட்ரிக் கருவிகள் நேற்று நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்தக் கருவிகள் உடனடியாக நியாய விலைக் கடைகளில் பொருத்தப்பட உள்ளன.இதன்படி ஸ்மார்ட் ரேஷன் அட்டை வைத்துள்ளோர், தங்கள் கைரேகைகளை இந்தக் கருவியில் வைத்த பிறகே பொருட்களை பெறமுடியும். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கமலநாதன், துணை பதிவாளர் கே.மணி உட்பட பலர் பங்கேற்றனர்.