போலந்து நாட்டில் தண்ணீருக்கு அடியில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டால் பரபரப்பு ஏற்பட்டது. 

இரண்டாம் உலகப்போரை, இந்த உலகம் அவ்வளவு எளிதாக மறந்துவிடாது. மறந்துவிடவும் முடியாது. அதே நேரத்தில், இந்த உலகத்தில் இனி 3 ஆம் உலகப் போர் என்ற ஒன்று நடக்கவே நடக்காது. அப்படி நடந்தால், அதன் பிறகு இந்த உலகத்தில் ஒருவர் கூட உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று, பல்வேறு அறிஞர் பெருமக்களும் ஒருமித்த குரலாகப் பதிவு செய்து உள்ளனர். அதே நேரத்தில், 3 ஆம் உலகப் போர் என்ற ஒன்று நடந்தால், அது தண்ணீருக்காகத் தான் நடக்கும் என்றும் என்றும், பலரும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட உலகப்போர் கருத்துக்களுக்கு மத்தியில், போலந்து நாட்டில் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டை செயல் இழக்கச் செய்தபோது நீருக்கு அடியில் அது வெடித்துச் சிதறி உள்ளது.

கடந்த 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை, பல்வேறு உலக நாடுகளுக்கு இடையே எதிர்பாராத விதமாக இரண்டாம் உலகப் போர் மூண்டது. இந்தப் உலகப் போரின் போது தான், மனித வரலாற்றில் முதன் முறையாக அணு ஆயுதம் பயன்பாட்டுக்காக வந்தது, பயன்படுத்தப்பட்டது. அதன் தாக்கம் இன்று வரை குறையாமல் இருப்பதோடு, மீண்டும் அப்படியான ஒரு பயங்கரமான அணு ஆயுதத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதில் உலக நாடுகள் பெரும்பாலும் ஒருமனதாகக் கவனமாகச் செலுத்தி வருகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், அந்த இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் பல்வேறு இடங்களில் அவ்வப்போது தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல குண்டுகள் செயலிழந்த நிலையில் காணப்பட்டாலும், சில குண்டுகள் இன்றும் வெடிக்கக்கூடிய நிலையில் தான் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அண்மையில் போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2 ஆம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்காமல் மண்ணுக்கு அடியில் புதைந்து இருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அந்த குண்டு பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டு வந்தன. அதனைச் சுற்றி பலவித அடுக்குகள் கொண்டு கட்டமைக்கப்பட்டு, அது மிகவும் பாதுகாப்பான முறையில் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த குண்டானது, கடந்த 1945 ஆம் ஆண்டு பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டு என்றும் கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டின் எடையானது சுமார் 5 ஆயிரத்து 400 கிலோ என்றும் கூறப்படுகிறது. இந்த குண்டு மிகவும் ஆபத்தான ஒன்றும் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதே நேரத்தில், இந்த வெடிகுண்டைச் செயல் இழக்கச் செய்யும் நேரத்தை அந்நாட்டு அரசு கணித்து வந்தது. அந்த பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், அந்த வெடிகுண்டைச் செயல் இழக்கச் செய்யும் முயற்சியின் போது, அது எதிர்பாரதாக விதமாக நீருக்கடியில் வெடித்துச் சிதறி உள்ளது. 

இதன் காரணமாக, தண்ணீர் மேலே நீண்ட உயரத்திற்கு அலையானது மேல் நோக்கி எழுந்தது. எனினும், தண்ணீருக்கு அடியில், குண்டு வெடித்ததில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. “தற்போது ஆபத்து நீங்கி உள்ளதாக” அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், கடல் வாழ் உயிரினங்களின் நிலை என்ன? என்று கேள்விகளும் எழுந்துள்ளன. அத்துடன், சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்பட்டதா? என்றும் கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. எனினும், தண்ணீருக்கு அடியில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டால், போலந்து நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.