ஐ.பி.எல். போட்டியில் இது வரை விளையாடாமல் இருக்கும் வீரர்கள் மற்ற அணிகளுக்கு மாற காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பமான முதலே பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகின்றனர். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்தது வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கடந்த 8 ஆண்டுகளாக ஜொலித்து சென்னை ரசிகர்களின் நம்பிக்கையைப் பெரிய அளவில் பெற்று இருந்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, அணியின் நிர்வாகத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே போட்டியிலிருந்து விலகி இந்தியா வந்து சேர்ந்தார். 

சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து, முக்கிய வீரரான ஹர்பஜன் சிங்கும் சென்னை அணியின் நிர்வாகத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறினார்.

சென்னை அணி மந்தமாகவே விளையாடுகிறது என்றும், கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

குறிப்பாக, கேப்டன் மகேந்திர சிங் தோனி மீதும், அவரது கேப்டன் ஷிப் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 

சென்னை அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி, தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பகிர்ந்து உள்ளார். அதில், “There’s a lot of bad things that they wishing on me” என்று, பதிவு செய்து உள்ளார். இது சென்னை அணியை மறைமுகமாகக் கூறியதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக, லுங்கி நெகிடியும் மறைமுகமாகப் பதில் அளித்திருக்கிறார்.

அதாவது, லுங்கி நெகிடியின் இந்த பதிவுக்குக் கீழே ஒரு ரசிகர் “நீங்கள் வேறு ஐபிஎல் அணிக்குத் தகுதியானவர்” என்று, கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்டிற்கு லுங்கி நெகிடியும் லைக் செய்து உள்ளார். இதனால், அவர் சென்னை அணியில் விளையாட விரும்ப வில்லை என்று பொருள் கொள்ளலாம் அல்லது சென்னை அணியை விட்டு விலகி, வேறு அணியில் விளையாடலாம் என்பது அதற்கு பொருளாகும்.

மேலும், தற்போது அனைத்து அணிகளும் தலா 8 மற்றும் 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மீதமுள்ள 7 மற்றும் 6 போட்டிகளில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு வீரர்களை இடமாற்றம் செய்யலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த சீசனில், 2 போட்டிகளுக்கு மேல் விளையாடாத எந்த வீரரையும், ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாற்ற முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வீரர்களை மாற்றிக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன. 

அதன்படி, ஒரு பக்கம் டெல்லி கேபிடல்ஸ் அணியில் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர் போன்றவர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், அந்த அணியில் ரஹானே இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதே போல், அந்த அணியில் அமித் மிஸ்ரா காயம் காரணமாகத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால், ஸ்பின்னர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், அணியில் 6 பவுலர்கள் உள்ளதால், இம்ரான் தஹிர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

இந்நிலையில், பிசிசிஐயின் புதிய அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்தி, டெல்லி அணிக்கு இம்ரான் தஹிரும், சென்னை அணிக்கு ரஹானேவும் இடம் மாற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் இன்னும் 3 வீரர்கள் அணி மாறலாம் என்று அதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது 

அதே நேரத்தில், தற்போது இடம் மாறும் வீரர்கள் அடுத்த சீசனில், மீண்டும் பழைய அணிக்குத் திரும்பி விடுவார்கள் என்றும், பிசிசிஐ தெரிவித்து உள்ளது.

அதே போல், நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால், அவர் இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இதனால், பந்து வீச்சில் சொதப்பி வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இவர் இடம் மாற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த அணியில் கிறிஸ் லென்னுக்கு இன்னம் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தின் போது, கிறிஸ் லின்னை வாங்குவதற்குத் தீவிரமாக முயற்சி செய்ததால், இவர் கொல்கத்தா அணிக்கு இடம் மாற அதிக வாய்ப்புள்ளது.

முக்கியமாக, கிறிஸ் கெய்ல் இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இது வரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மற்ற அணிகள் இவரைக் கேட்கும் பட்சத்தில் பஞ்சாப் அணி விட்டுக்கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த ஐ.பி.எல். போட்டியில் அணி அதிரடியாகப் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.