குடிநீர், கழிவு நீர் உள்பட அடிப்படை வசதிக்கு பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மனைப்பிரிவில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவிகித இடத்தை பொழுதுபோக்கிற்கும், 1 சதவிகித இடத்தை பொது பயன்பாட்டிற்கும், 0.5 சதவிகித இடத்தை மின்சார வாரியத்திற்கும் வழங்க வேண்டும். 
2019 முதல் நடைமுறையில் உள்ள இந்த விதிகளில் மனைப்பிரிவுக்கு அனுமதி பெறும் நடைமுறையை எளிமைப்படுத்துமாறு கிரெடாய் அமைப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

 அதில், கட்டடம் கட்ட அனுமதி கேட்கும் மனைப்பிரிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மேலும்  சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைக்கு உட்பட்ட இதர நகர்ப்புற உள்ளாட்சிகள் தவிர, இதர பகுதிகளில் உரியகட்டணங்களை பெற்ற பின்பு தார்சாலைகள் அமைப்பு, மழைநீர் கால்வாய், குடிநீர் வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சாலை விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இனிமேல் அனுமதி பெற முடியும். 


அங்கு சாலை, திறந்தவெளி பகுதி உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து அதற்கான ஆவணங்களை உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டு இருக்கிறது. 


அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் விற்பனைக்கு ஏற்கனவே செக் வைத்துள்ள அரசு இப்போது வீட்டு மனை லே அவுட் அனுமதிக்கும் இதுப்போன்ற சில நிபந்தனைகளை விதித்து , இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் இருப்பது உறுதியானால் மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்க வேண்டும் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.