கள்ளக் காதலை கைவிட மறுத்த தாயை, 10 ஆம் வகுப்பு படிக்கும் மகனே குத்தியால் குத்தி கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கடலூர் மாவட்ட சிதம்பரம் அடுத்து உள்ள லால்புரம் ஊராட்சி பகுதியில் உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 48 வயதான பாலமுருகன், மனைவி 40 வயதான சங்கீதா, தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த 15 வயது சிறுவன், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இதனிடையே,  48 வயதான பாலமுருகன், சிதம்பரம் லால்கான் தெருவில் கவரிங் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சிறுவனின் தாயார் சங்கீதாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கமானது, நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர் என்றும், கூறப்படுகிறது.

குறிப்பாக, கணவன் பாலமுருகன் வீட்டில் இல்லாத நேரத்தில், சம்மந்தப்பட்ட அந்த இளைஞர், அடிக்கடி சங்கீதாவை பார்க்க, அவர் வீட்டிற்கே வந்து சென்றார் என்றும் கூறப்படுகிறது. இந்த விசயம் பற்றி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தவறாக பேச ஆரம்பித்த நிலையில், இந்த விசயம், சங்கீதாவின் 15 வயது மகனுக்கும் தெரிய வந்தது. இந்த செயலால், மனம் நொந்து போன அந்த 10 ஆம் வகுப்பு மாணவன், கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார் என்றும், கூறப்படுகிறது.

இதனை பிடிக்காத அந்த மாணவன், தனது தாயாருக்கு புத்தி சொன்னதாகவும், ஆனால் எவ்வளவோ சொல்லியும் அதனை தாயார் சங்கீதா கேட்கவில்லை என்றும், தெரிகிறது. 

இதனால், இன்னும் கோபம் அடைந்த அந்த 10 ஆம் வகுப்பு மாணவன், தனது தாயாரின் இந்த நடவடிக்கை குறித்து, தனது தந்தை பாலமுருகனிடம் புகார் கூறியுள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பாலமுருகன், தனது மனைவியை அழைத்து எச்சரித்து உள்ளார். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. 

அந்த சண்டையில் கோபித்துக்கொண்ட சங்கீதா, சிதம்பரம் கொத்தங்குடி தோப்பில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு, அங்கிருந்து நேற்று மதியம் சங்கீதா தனது வீட்டிற்கு மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். 

அப்போது, கணவன் பாலமுருகன், மனைவி சங்கீதா, 15 வயது மகன் ஆகிய 3 பேருக்கும் இடையே மீண்டும் சண்டை வந்து உள்ளது. 

இதில், ஆத்திரமடைந்த அந்த 15 வயது சிறுவன், தான் வைத்திருந்த கத்தியால் பெற்ற தாய் என்றும் பார்க்காமல், தாயார் சங்கீதாவி்ன் வயிற்றில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்து விழுந்த சங்கீதா, அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, அந்த 15 வயது சிறுவன் நேராக சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அப்போது, “ஒரு இளைஞனுடன், என் தாயார் கள்ளக் காதல் வைத்திருந்ததாலும், அதனை அவர் கைவிட மறுத்ததாலும், எனது தாயை நானே கொலை செய்து விட்டேன்” என்று, கூறி அவர் சரண் அடைந்துள்ளார். இதனையடுத்து, அந்த சிறுவனை கைது செய்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.