கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.  

இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை அணியில் ரோகித் ஷர்மா உடன் குயின்டான் டி காக் தொடக்க வீரர்களக களமிறங்கினர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

போட்டியல் நிதானமாக ஆடிய டி காக், 2 வது ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

இதையடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ், கேப்டன் ரோகித்துடன் கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். பவர் ப்ளே முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. பவர் ப்ளேக்கு பின்னர் சூர்ய குமார் யாதவ் அதிரடியில் இறங்கினார். அரை சதத்தை கடந்த சூர்ய குமார் யாதவ் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் சுப்மான் கில் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதனையடுத்து களம் இறங்கிய இஷான் கிஷான், ஒரு ரன்னில் நடையை கட்டினார். இதனால், மும்பை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். கே.கே.ஆர் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். இதன்காரணமாக ரோஹித், பாண்ட்யா இருவரும் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாமல் சிரமப்பட்டனர். 43 ரன்களில் இருந்தபோது பேட் கம்மின்ஸ் மெதுவாக வீசிய பந்தை, அதிரடியாக அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் ரோஹித் சர்மா.

குறிப்பாக, இந்த போட்டியிலும் கடைசி 5 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே அடித்த மும்பை அணி, 6 விக்கெட்டுகளை இழந்தது. பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ரூணால் பாண்டியா என பிக் ஹிட்டர்கள் எல்லாருமே சொதப்பி அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

முக்கியமாக, 12 பந்துகளை வீசிய ரசல், கிட்டத்தட்ட 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை சரித்து சாதனை படைத்தார்.

பொல்லார்ட், ஜென்சென், குர்ணால், பும்ரா, ராகுல் சாஹர் என மும்பை அணியின் ஐந்து பேட்ஸ்மேன்களை அவர் அவுட் செய்திருந்தார். இதில் பொல்லார்ட் மற்றும் குர்ணால் பவர் ஹிட்டர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி, 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறிப்போனது.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணாவும், ஷுப்மான் கில்லும் களமிறங்கி மும்பை அணியின் பந்து வீச்சை, நிதானமாக எதிர்கொண்டு விளையாடினர். 

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில், கில் 33 ரன்னில் அவுட்டானார். அவரையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 ரன்னிலும், மார்கன் 7 ரன்னிலும், ஷகிப் அல் ஹசன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் விளையாடி, அரை சதமடித்து 57 ரன்னில் அவுட் ஆனார்.

எனினும், கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தான், ஆட்டத்தின் போக்கே திசை மாறி விறுவிறுப்பு அடைந்தது.

அப்போது, தினேஷ் கார்த்திக், ஆண்ரே ரசல் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வந்தனர். அப்போது, ரசல் 15 பந்துகளில் 9 ரன் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினார். 

பின்னர், தினேஷ் கார்த்திக் 11 பந்துகளில் 8 ரன்களும், ஹர்பஜன் சிங் 2 பந்துகளில் 2 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இப்படியாக கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து, வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மும்பை அணியின் சார்பில் அதிக பட்சமாக ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி போராடி வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், நடப்பு சீசனின் முதல் போட்டியில் தோல்வி கண்டதோடு, மும்பை அணியின் ஓப்பனிங்கிற்கு சரியான தேர்வு இன்னும் அமையாதது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கடும் விமர்சனங்களை எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.