நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் இளம் கதா நாயகர்களுள் ஒருவர். தற்போது பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் கெளதம். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணன் இயக்குகிறார்.

இந்நிலையில் அருண் சந்திரன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் செல்லப்பிள்ளை திரைப்படத்தின் மோஷன் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக நேற்றைய தினம் அறிவித்தனர் படக்குழுவினர். 

அதனை தொடர்ந்து இன்று காலை 11.05 க்கு இந்த படத்தின் மோஷன் டீஸரை விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி ஆகிய மூவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சூரி மோஷன் போஸ்டரை வெளியிட்டு, நம் தேசத்தின் செல்லப்பிள்ளை நேதாஜியின் 125ஆம் ஆண்டு கொண்டாட்டமாக வரும் இந்த செல்லப்பிள்ளைக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். இதே போல் நடிகர் விஜய் சேதுபதியும், நடிகை கீர்த்தி சுரேஷும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் மோஷன் டீசரை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர்.

இயக்குனர் பொன்ராம் அவர்களின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிவர் இயக்குனர் அருண் சந்திரன். செல்லப்பிள்ளை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.