தொழில் அதிபரிடம் 10 லட்சம் ரூபாய்க்கு சிறுமி விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில், “10 வயதுடைய எனது பேத்தி, சேலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடைய வீட்டில் வேலை பார்த்து வருகிறாள் என்றும், இந்த சிறுமியை அவர் சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு அழைத்துச் சென்று உள்ளார் என்றும்” அதில் குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “எனது பேத்தியை அவர் எனக்கு காண்பிக்க மறுத்து விட்டார் என்றும், இதனால் அவரை அழைத்து முறையான விசாரணை நடத்த வேண்டும்” என்றும், அந்த பெண் வலியுறுத்தி உள்ளார். 

இது புகார் தொடர்பாக சேலம் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி மீட்கப்பட்ட நிலையில், காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். 

அத்துடன், அந்த சிறுமியின் தாயார், உறவுக்கார பெண் ஒருவரிடம் செல்போனில் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில் சிறுமியின் தாய் பேசும் போது, “என்னுடைய குழந்தையும், நானும் நன்றாக இருக்க வேண்டும். இதற்காக, தொழில் அதிபர் ஒருவர் எனக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். இந்த பணத்தை வாங்கிய நான், தற்போது வங்கியில் போட்டு வைத்து உள்ளேன். 

ஒரு வீட்டை கட்டி விட்டு, அங்கு நான் சென்று விடுவேன். என்னுடைய குழந்தையை நான் கூட பார்க்க முடியாது” என்று, அதில் கூறியிருக்கிறார்.

இதற்கு, பதில் கூறிய அந்த உறவுக்கார பெண், “உனக்கு மனசாட்சியே இல்லையா? இவ்வளவு சீப்பா நடந்து இருக்கிறாய்? உன்னிடம் பேசுவதே வேஸ்ட்” என்று கூறி, அந்த இணைப்பைத் துண்டித்து உள்ளார். 

இதனையடுத்து, சிறுமியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்றது போன்று, சிறுமியின் தாயார் பேசிய இந்த ஆடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆடியோ போலீசாரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், இது தொடர்பாக சேலம் மகளிர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் பேசும்போது, “கடந்த 2 நாட்களுக்கு முன்பே அந்த சிறுமி மீட்கப்பட்டு உள்ளார் என்றும், தற்போது அவர் பாதுகாப்பு இல்லத்தில் பத்திரமாகத் தங்க வைக்கப்பட்டு உள்ளார்” என்றும், தெரிவித்தார்.

மேலும், “இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும், அதன் பிறகே முழுமையான தகவல்கள் தெரிய வரும்” என்றும், அவர் கூறினார்.