14 வயது சிறுமியை 12 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரில், தற்போது 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்து உள்ள வட்டமலை குள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த தறித் தொழிலாளி ஒருவருக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 

இவர்களில், மூத்த மகள்கள் இருவருக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் அவரவர் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

அத்துடன், அவரது 14 வயதான 3 வது மகள் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு வரை படித்துக்கொண்டே, தனது அக்காள் வீட்டில் தங்கியிருந்த படி வீட்டின் அருகில் உள்ள ஒருவருடைய வீட்டுக்கு வேலைக்கு சென்று வந்து உள்ளார். 

இந்த நிலையில், அக்காள் கணவன் சின்ராஜ் என்பவர் தனது வீட்டில் தங்கியிருந்த அந்த 14 வயது சிறுமியை மிரட்டி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அப்போது, “என்னை விட்டு விடும் படி” அந்த சிறுமி எவ்வளவோ கெஞ்சியும், சின்ராஜ் அதனை பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. 

மேலும், “இந்த பலாத்காரம் பற்றி வெளியே சொன்னால், உனது அக்காளின் வாழ்க்கை பறிபோய் விடும்” என்றும், அவர் மிரட்டியதால், அந்த சிறுமி பயந்து இது குறித்து வெளியே யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்து உள்ளார். 

ஆனால், இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிறுமியின் அக்கா கணவன், மீண்டும் மீண்டும் அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். இதனால், அந்த சிறுமி தினமும் தனது நிலையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதுகொண்டே இருந்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி வழக்கம் போல் அருகாமையில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்கு சென்று வந்தார். அந்த வீட்டின் உரிமையாளரின் பார்வையும், இந்த சிறுமி மீது சபலப்பட்டு உள்ளது. 

இதனால், “எனது ஆசைக்கு நீ இணங்க வேண்டும்” என்று, சிறுமியை அவர் வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, இங்கிருந்து எப்படி மீள்வது என்று யோசித்துக்கொண்டிருந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் வட்டிக்கு பணம் வாங்கி, 2 மகள்களுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்த நிலையில், அந்த கடன் இன்னும் முடியாமல், அவர்களது பெற்றோர் பணத்திற்காகத் தவித்து வந்ததும் தெரிய வந்தது.

இதனால், தாய் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு, அந்த கடனை அடைத்து வந்தார். 

மேலும், தந்தையும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்ததால், தந்தைக்கும் மருத்துவ செலவுக்கு தினம் தினம் பணம் தேவைப்பட்டுக்கொண்டே இருந்தது. இப்படியான நிலையில், இந்த 14 வயது சிறுமி சம்பாதிக்கும் பணத்தில் தான், அவரது குடும்ப செலவே அன்றாடம் நடந்து வந்திருக்கிறது. 

இந்நிலையில், இந்த வேலையை தான் விட்டு விட்டால், தனது குடும்பம் இன்னும் வறுமையில் வாடி விடுமே என எண்ணி அந்த சிறுமி, மனதை கல்லாக்கி கொண்டு தொடர்ந்து அந்த வீட்டிற்கு வேலைக்கு சென்று வந்தார். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த வீட்டின் உரிமையாளர், அந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, அந்த வீட்டின் உரிமையாளரின் உறவினர்களான சரவணன், பன்னீர், மூர்த்தி, கண்ணன், அபி, கோபி, சேகர், சங்கர், ஆகியோரும் சேர்ந்து, அந்த சிறுமியை மிரட்டியே தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

மேலும், இந்த விசயத்தைத் தெரிந்துகொண்ட சின்ராஜின் நண்பர்களான குமார், வடிவேல், சுந்தரம் ஆகியோரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

ஒரு கட்டத்திற்கு மேல், இந்த பாலியல் பலாத்கார வலியை தாங்கிக்கொள்ள முடியாத அந்த சிறுமி, இது குறித்து தனது தாயாரிடம் கண்ணீர் மல்க கூறி, சிறுமி அழுது உள்ளார். இதனையடுத்து, அந்த ஊரில் உள்ளவர்கள் பஞ்சாயத்து பேசியதாக கூறப்படுகிறது. 

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடப்பது குறித்து, அக்கம் - பக்கத்தில் வசிப்பவர்கள் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியா, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியா, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், தற்போது அதிரடியாக 11 பேர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.